கறுவுளக் கொள்ளையர்கள்

அரசியல் கழுகுகள்
அத்தனை வாழ்வாதாரங்களையும்
மிச்சமே வைக்காமல்
கடிதுகவ்விச் செல்கின்றன

எதைத்தான் திருடுவது என்ற
வெட்கமும் வேண்டாமா

சோறு திருட்டு
சுகம் திருட்டு
உரிமை திருட்டு
உறக்கம் திருட்டு
என்பதெல்லாம் போக

நீர் திருட்டு
நிலம் திருட்டு
நெருப்பு திருட்டு
காற்று திருட்டு
ஆகாயம் திருட்டு என்று
பஞ்ச பூதங்களைக்கூட
எப்படித்தான் திருடுகிறார்களோ
பிரபஞ்சத் திருடர்கள்

ஊர் கொஞ்சம் பெருசு என்றால்
அங்கே ஏரி திருட்டு

சிற்றூர் என்றால் அங்கே
குளம் கேணி குட்டை
குட்டையின் மண்
மண்ணின் தூசு

காப்பொன்னிலும்
மாப்பொன் எனும் நக்கல்மொழி
அரசியல் நடப்புமொழியிடம்
தோற்றோடிப்போனதால்

சளியைக்கூட
பொத்தி வையுங்கள்

வருவார்கள் வெல்வார்கள்
வெள்ளாடை போர்த்திய
கறுவுளக் கொள்ளையர்கள்

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

நமது எதிர்காலமும் அல்லவா கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது