கலிஃபோர்னியா கவியரங்கில்...

நான் கனடாவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கொரு வழக்கம். நான் எங்கு சென்றாலும் சென்ற இடத்து அழகினை என் உயிர்முட்டப் பருகி உணர்வு பொங்கப் பாடி மெல்லக் கூத்தாடி மகிழ்வேன்

கலிஃபோர்னியா என்னை வெகுவாகக் கவர்ந்தது. பொற்பட்டுச் சிறகசைக்கும் பட்டாம் பூச்சியாய் என் இதயக் கொடியில் வந்து சிலிர்ப்பாய் அமர்ந்தது. பாடினேன் அதற்கொரு பாட்டு - இங்கு அதைப் பாட வந்தேன் உள்வெளிகள் பூத்து

இந்தக் கவிதை வல்லினம் மிகக்கொண்டு இசைகூட்டிச் செய்யப்பட்ட சந்தக் கவிதை.

தொடர் எதுகைகள் கோத்து இதயத்தில் மகிழ்ச்சித் தாளம் எழ கவனமாய் உருவாக்கப்பட்ட கடினமான நடை - ஆனாலும் எளிமையான தமிழ்


அடடா அடடா கலிஃபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிஃபோர்னியா

வட்ட வட்ட நிலவைத் தொட்டுத்தொட்டுப் பேசும்
உச்சி மலைத்தொடரும் உண்டு
எட்டி எட்டிப் பார்க்க தட்டுப்படா அடியில்
வெத்துப் பள்ளத்தாக்கும் உண்டு

நட்ட நடு வானை முத்தமிட்டு ஆடும்
நெட்டை மரக்காடும் உண்டு
தொட்டுத் தொட்டுக் கரையில் கட்டுக்கதை எழுதும்
சிட்டு அலைக்கடலும் உண்டு

அடடா அடடா கலிஃபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிஃபோர்னியா

சுட்டுச் சுட்டு எரிக்கும் பொட்டில் அனல்தெறிக்கும்
பொட்டல் வெளிப் பாலையும் உண்டு  
மொட்டு விட்டுப் பூத்து வெட்டுங்குளிர் கோத்து
கொட்டும் பனித்தூறலும் உண்டு

நெட்டி கிட்டி முறித்து தட்டுத் தடுமாறி
கெட்ட நில நடுக்கமும் உண்டு
வெட்டி வெட்டி எடுக்க கொட்டிக்கொட்டிக் கொடுத்த
கட்டித் தங்கச் சுரங்கமும் உண்டு

அடடா அடடா கலிஃபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிஃபோர்னியா

விட்டு விட்டு மேகம் கொட்டிக்கொட்டிப் போகும்
பச்சை வயல் வெளியும் உண்டு
எட்டி எட்டிப் பார்த்து விட்டுவிட்டுக் குமுறும்
வெள்ளை எரி மலையும் உண்டு

பட்டுச் சிட்டுப் போல மெட்டுக்கட்டித் தாளம்
இட்டுச் செல்லும் நதிகளும் உண்டு
தட்டித் தட்டி உலகைக் கட்டிக்கட்டி ஆள
விட்ட கணிப்பொறியும் உண்டு

அடடா அடடா கலிஃபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிஃபோர்னியா

எட்டுப் பத்து மாடி கட்டித்தரும் வலிமை
கிட்டித் தரும் செல்வமும் உண்டு
கட்டுக் கட்டு நோட்டுகள் கொட்டிக்கொட்டிக் கொடுத்தும்
வட்டி கட்டும் செலவும் உண்டு

சொட்டுச் சொட்டுத் தேனாய் பட்டுப்பட்டுக் கவிதை
இட்டுத்தர நானும் உண்டு
தட்டித் தட்டிக் கைகள் கெட்டிமேளச் சத்தம்
கொட்டித்தர நீங்களும் உண்டு

அடடா அடடா கலிஃபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிஃபோர்னியா
நலமாக இருக்கிறாயா
அம்மா
ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன
நலமாக இருக்கிறாயா
அம்மா
எங்களுக்குத் தவித்தபோது
உனக்கே தவித்ததுபோலத்
தண்ணீரோடு நின்றாய்
இன்று
உன் தவித்த வாய்க்குத்
தண்ணீர்தர உன்னுடன்
ஒருவருமே இல்லை
கண்ணீரோடு நிற்கிறாய்
பிள்ளைகள் சுகம் மட்டுமே
போதும் என்ற தியாகத்தைப்
பொட்டலாய்ப் போன
உன் வாழ்க்கையிலும்
தீபமாய் ஏற்றிக்கொண்டாய்
ஐந்து ஆண் பெற்ற உனக்கு
பெண்பிள்ளை என்றால் உயிர்
மருமகளிடமே
இத்தனைப் பாசம் கொட்டும் நீ
மகளிடம் எத்தனைக் கொட்டச்
சேர்த்துச் சேர்த்து வைத்துக்
காத்திருந்திருப்பாய்
உன் கனவுதிர் இரவுகளிலும்
தரிசுப் பகல்களிலும்
இன்று உன்னோடு
சேர்ந்து வாழும் ஜீவன்கள்
நீ பெற்ற பிள்ளைகள் அல்ல
நீ பெற்ற நோய்கள்தாம்
காசுதருவோம் வீடுதருவோம்
ஸ்கைப் வழியே முத்தம் தருவோம்
வேறு எதைத் தந்துவிடப் போகிறோம்
உன் உடல் நோய்க்கு
உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
கொண்டுவரச்சொல்லி
மருந்து தருவோம்
உன் மன நோய்க்கு
பொங்கும் கண்ணீரைத் தவிர
வேறு என்ன தருவோம்
வெளிநாடு சென்றால்
எவனும்
பணக்காரன் ஆவதில்லை
எல்லோருமே
பிச்சைக்காரர்கள்தான்
ஆகிறார்கள்
விமானம் ஏற
உன் கால்களுக்கு வலுவில்லை
ஆகாயப் பயணம் செய்ய
உன் நெஞ்சுக்குள் திடமூச்சு இல்லை
தாபங்களும் தவிப்புகளுமோ
நாளும் பொழுதும்
பல்லாயிரம்கோடி மைல்களை
அநாயாசமாய்க்
கடந்து கடந்து உயிர்கடுக்கத்
தேம்பி நிற்கின்றன
நலமாக இருக்கிறாயா
அம்மா
எப்படி
நலமாக இருப்பாய்
நீ எத்தனைதான் சமாளித்தாலும்
உன் காயங்களை மறைத்து மறைத்து
நல்லா இருக்கேண்டா நல்லா இருக்கேண்டா
என்று நீ சொல்லிக்கொண்டே இருந்தாலும்
உன் பிள்ளைகள் எல்லோரையும்
ஒருநாளேனும் ஒன்றாய் ஒரு கூடத்தில்
ஒற்றை இரவிலாவது
வரிசையாய் மெத்தையிட்டு
அடுக்கடுக்காய்ப் படுக்க வைத்து
இந்தக் கடைசி முதல் அந்தக் கடைசிவரை
பார்த்துப் பார்த்து பேசிப்பேசி
அணைத்து அணைத்து
ஆனந்தக் கண்ணீர் உகுத்து உகுத்து
உறங்கித் தீர்க்க வேண்டும்
என்ற உன் ஆசையை உன்னால்
மறைக்கவே முடியவில்லையே
அம்மா
நலமாக இருக்கிறாயா
அம்மா
இதோ
இந்த மண்ணில்தான் கேட்கிறாய்
உன் சொர்க்கத்தை
அது ஒன்றும்
கிடைக்கவே கிடைக்காத
பேராசையும் இல்லை
என் வேண்டுதலும் உனக்காக
அது ஒன்றுதான் அம்மா
இதோ
வெகு பக்கத்தில் இருக்கிறது
இதோ
இப்போது வந்துவிடப் போகிறது
இதோ இதோ
எல்லோரும் ஒன்றாக
உன்னுடன் இருப்போம்
அந்த நினைவுகளில்
கனியும் கனவுகளில்
நீ நலமாக இரு அம்மா
எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கிறது
வேறு எவரின் கதையோடும்
ஒன்றிப்போகாமல்
தனக்கே தனக்கான கதை என்று
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது
எவ்வளவு விளக்கமாகச் சொன்னாலும்
உன்னால் புரிந்துகொள்ளவே முடியாது
என்று சத்தியம் செய்யும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது
எனக்கு நடந்ததுபோல்
இந்த உலகில் எவருக்குமே
நடந்துவிடவே கூடாது என்று
கண்ணீராடிக் கேட்டுக்கொள்ளும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது
என் நிலை மட்டும்
எவருக்கேனும் வந்திருந்தால்
என்றோ அவர்
மண்ணோடு மண்ணாக
மடிந்துபோயிருப்பார் என்று
திட்டவட்டமாகச் சொல்லும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது
ஒவ்வொரு கையின்
ரேகைகளைப் போலவே
அத்தனைபேர் வாழ்க்கையுமே
வித்தியாசமானவைதானா
வலி என்பது
போதை தரும் சக்தியா
உள்ளுக்குள் வெகுநாட்களாய்
ஊறி ஊறிப் புளித்துப்போய்
நுரைத்துக்கொண்டு நிற்கும்
உணர்வுகளும் நினைவுகளும்தான்
வலியா வேதனையா
மதுவில் மூழ்கியவன் உளறுவதைப்போல
வலியில் மூழ்கியவனும்
தான் என்ன சொல்கிறோம்
எப்படிச் சொல்கிறோம்
என்பதையே அறியாதவனாய்ப்
பினாத்துகிறானே
ஆனாலும்
ஒருவனின் துக்கத்தைப்
போதை என்று சொல்லும்போது
உள்ளுக்குள் திரள்திரளாய்
துக்கம் பற்றிக்கொண்டு வருகிறது
துக்கத்தைவிட்டு
விலகிக்கொள்ளுங்கள்
துக்கம்
நம் உடன் பிறந்தவையல்ல
காலில் குத்திய முள்ளைக்
கையில் எடுத்துத்
தலையுல் குத்திக்கொள்வதுதான்
வலியும் துயரமும் துக்கமும்
உங்கள் கதைகளை எல்லாம்
மூட்டைகட்டிக்
குப்பையில் எறியுங்கள்
எறிந்த குப்பையை
மறக்காமல்
தீயிட்டுக் கொளுத்திவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல் நடங்கள்
பிறகும் எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கும்
ஆனால் அது
பொதுவான சுகமான
ஒரே கதையாக இருக்கும்
வெற்றிக்
கதையாக இருக்கும்
Defend Snowden>>>i dont agree with Deepavali but you well expressed on Deepam in Tamil....இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும் 
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம்
இன்பமே ஒளிரட்டும்<<<<
தீபாவளியை மட்டுமல்ல எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். அதன் நோக்கத்தைச் சீர் செய்துவிட்டாலும் அடிப்படையை மேலே கொண்டுவந்து நிறுவிவிட்டாலும் அறத்தை வலியுறுத்திவிட்டாலும் அன்பை விதைத்துவிட்டாலும் அறிவைப் பெருக்கிவிட்டாலும் போதும் போதும் இல்லையா?
20161028

ஆமாம் உங்களுக்கென்ன RSS தான் இந்துக்கள் ISIS தான் முஸ்லிம் என்று சொல்லிப் பினாத்திக்கொள்வீர்கள்.
ஒருங்கிணைந்து இவர்களை உண்டு இல்லை என்று ஆக்க முன்வரமாட்டீர்கள். ஒளிந்தோடுவதே உங்கள் வேலை. கேட்டால் பகுத்தறிவு என்பீர்கள் ;-)
உண்மையான பகுத்தறிவு ஓரமாய் நின்று அழும், பாவம்!

*
எல்லாம் அந்நிய மோகம்தான். உள்ளூர்க் காரன் அரைவேக்காடு வெளிநாட்டுக்காரன் அதிமேதாவி என்பதும், தன் வேரின் பண்பாட்டையே நெருப்பு வைத்துக்கொளுத்தும் பாதையும் இவர்களுடையது.
நல்ல இலக்கியக்காரனுக்கு வேர் தன் இலக்கியம்தான் தன் பண்பாடுதான், ஆனால் அவன் ஒரு பறவையாய் உலகமெங்கும் பறந்து ஒப்பீடு செய்து கொண்டு தன் கூட்டை நேசித்து மகிழ்வான் பெருமை பொங்க
*

குற்றம் ஒருபோதும் பாதுகாப்பாகாது
இன்னொரு பெரிய குற்றத்திற்கான
வேராகவே அது வளரும்

*

Jeyaruban Mike Philip திரு.புகாரி! மதங்கடந்த மனிதாபிமானத்தைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். மதம் என்பது மனிதாபிமானமற்ற சூழலில் அவரவர்களால் அறிவுறுத்தப்பட்ட போதனை.
ஜெயரூபன், நீங்கள் கானலைக் கண்டு நிஜமென்று நம்புகின்றீர்கள்.
மார்க்கங்களின் நோக்கம் அறம் வளர்ப்பது மட்டுமே. அது பிழையானதா?
பிழைப்புவாதிகளும், ஆதிக்கவெறியர்களும், அரசியல் சில்லுண்டுகளும் மார்க்கத்தைப் பிழையாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
நெருப்பு என்பது புனிதமானது. அதை கூரையில் வைப்பவனின் கையே வக்கிரமானது!
இல்லை என்று சொல்வீர்களா?

*
வசந்தத்தில்
மடியில் விழும்
மலர்களைவிட
பாலையில்
நாவில் விழும்
மழைத்துளிகளால்
வடிவமைக்கப் படுவதே
வாழ்க்கை

*

முட்டி முட்டி மோதி மோதி கருகக் கருகத் துளிர்விட்டுத் துளிர்விட்டு முளைப்பதென்ன சாதாரணமா?
ஆனாலும் ஏற்க முடியவில்லையே இந்த வைரப்பயிரை, ஏன்?
உச்சகட்ட ஊழல்?
பிச்சைக்காரர்களாய்ப் பார்க்கும் பணக்காரம்?
எழுந்தால்தானே கவிழ்க்க வருவாய் என்று தரையோடு தரையாய்க் கட்டிவைத்திருக்கும் அதீத அதிகாரம்?
எல்லாம் தொலையட்டும்
மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே அம்மா!
ஆனாலும் நீ நலம்பெற வேண்டும் எழுந்து நடமாடவேண்டும்!
நீ இல்லாததால் மட்டுமே இங்கே தங்கம் விளையப் போவதில்லை அதே ஊழல்தான் இன்னும் அதிக விளைச்சல் காணப் போகிறது!

*

>>> மதமாகி சகமனிதனை எதிரியாக பார்க்க வைக்கும் போது அதை விமர்சிப்பது தேவையாகி விடுகிறது ஐயா!<<<
அடுத்த ஊர்க்காரனையும் எதிரியாய்ப் பார்ப்பது மனித இயல்பு. அதுதான் ஒழிக்கப்பட வேண்டும்.
நான் அறிந்து எந்த மதமும் இன்னொரு மதத்தவனை அழிக்கவோ வெறுக்கவோ சொல்லவில்லை.
அயலானை நேசி என்பது கிருத்தவம் முஸ்லிம் இரண்டிலும் சொல்லப்பட்டவை.
புத்தரோ மகாவீரரோ எவரையும் எதிரியாகப் பார்க்கச் சொல்லவில்லை.
மனித வக்கிரங்களை எதனோடு முடிச்சுப் போட்டாலும் அது கெட்டது என்றாகிவிடும்.
அரசியல் அவசியமானது அதனுள் வக்கிரம் புகும்போது அது கேடுகெட்டதாகிறது. சுத்தம் செய்ய வேண்டும் அதற்குக் காமராஜர்கள் தேவையே தவிர அரசியல் ஒழிப்பால் நாடு அனாதையாகிவிடும்!

*

மூடநம்பிக்கைகளிலிருந்து தனிமனிதன்தான் திருந்த வேண்டும்.
அவன் காதுகொடுக்கத் தயாராக இருந்தால் ஒரு கோடி மூடநம்பிக்கைகளைக் கொட்டிவிட்டு ஒவ்வொன்றுக்கும் பணம் வசூலிக்க ஆட்கள் நிறையவே உண்டு.
அந்தப் பிழைப்பில் வாழ்ந்தவர்கள் அன்று ஏராளம். ஆனால் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் நம் கல்வி தந்த அறிவுக்கான சவால்.

*

ஆணுக்குக் கிடைக்கும் எல்லாமும்
எல்லா வயதிலும்
எல்லாப் பெண்களுக்கும்
கிடைத்தலே வேண்டும்!

*
தெற்கு
தேய்க்கப்படுகிறது
ஆனாலும்
தெற்கே வாழ்கிறது

*
ஆப்பிளில் இருந்ததா
அல்லது
ஆதாமில் இருந்ததா
பாம்பு
*

மரம்விட்டுப் பிரிந்த பின்னும்
இந்த இலைகளுக்குத்தான்
எத்தனை மகிழ்ச்சி
எத்தனைக் கவர்ச்சி

*
எந்தப் பண்டிகை என்றாலும் கொண்டாடப் போவது வணிகர்கள்தாம். திண்டாடப்போவது ஏழைச் சிறுவர்கள்தாம்.
பிஞ்சுக்கு நெருப்பு வைக்கும் பட்டாசு
பட்டாசுக்கு நெருப்பு வைக்கும் பிஞ்சு
வெற்றி எப்போதும் பட்டாசுக்கே!

*


பிறந்தநாள்
நீ மலர்ந்த நாள்
அந்த
ஒற்றை நாள் மட்டுமே
உன்னால்
தேர்ந்தெடுக்கப்படவே முடியாத
உன் சிறப்பு நாள்
உன் இறுதிநாள்
தீர்மாணிக்கப்பட்டிருக்கும்போது
அதை அறிய நீ இருக்க மாட்டாய்
ஆக...
இறைவனால் தீர்மானிக்கப்பட்டு
உன் கைகளில் தவழும் உன் நாள்
உன் பிறந்தநாள் மட்டுமே
அந்த நாளின்
மேன்மையைக் கொண்டாடு
அதைத் தந்த இறைவனிடம்
உன் அன்பை அள்ளிக்
கொட்டு
சின்னச் சின்னக்
கண்ணீர் முத்துக்களால்
நன்றிகள் பெருக்கு
உன்
ஒவ்வொரு பிறந்தநாளும்
இறைவனை நீ தேடிச் செல்லும்
தங்கப் படிக்கட்டுகள்
இடையிலேயே
தடுக்கி விழுந்துவிடாமல்
அருளப்பட்ட
இறுதிப் படிக்கட்டுவரை
இன்பமாய் இனிமையாய்
உன்னையே நீ பாராட்டி
ஊரறிய உன் வயதைச் சொல்லி
நிதானமாய் ஏறிச் செல்
எத்தனைக்
காய்ந்த வயிறுகளை
நிறைக்க இயலுமோ
அத்தனையையும் நிறைத்துக்
கொண்டாடு
ஒரே ஒரு
புது நட்பையாவது
பெற்றுப் போற்று
கசந்துபோன உறவுகளில்
ஏதோ ஒன்றையாவது
மீட்டெடுத்து அள்ளியணை
உன் ஒவ்வொரு பிறந்தநாளிலும்
உன் கசடுகளைக் களைந்த
புத்தம் புதியவனாய்ப்
பிறந்து சிரி
உன்னாலும்
தீர்மானிக்க முடிந்த
இன்னும்
எத்தனை எத்தனை
உன் பிறந்த நாட்கள்
உன் முன்
உனக்காகக் காத்திருக்கின்றன
பார் மகிழ்
கொண்டாடு குதூகலி
பாம்புகள் நெளிகின்றன
கழுத்துப்பட்டிகளுடன்
பணியிடங்களில்
நாற்காலிகளில் அமர்கின்றன
கணினி பார்க்கின்றன
புதுப்பணியாளனின்
மேலான்மைத் திறன்கண்டு
கண்கள் சிவப்பேற
நெளிகின்றன பாம்புகள்
வட்டமேசையின் இடையிடையே
ஏராளமான பாம்புகள்
வனப்பான ஆடைகளில்
துடியாகப் பேசுகின்றன
கொத்துவது தெரியாமல்
கொத்தத் தெரிந்த பாம்புகளால்
அயராப் பணிசெய்து கிடக்கும்
அபலை எலிகள் அவதியுறுகின்றன
எடு விடு என்கிற
இணைவாய்ப்புத் திட்டத்தால்
விடுபட்டு வீதியில் அலைய
வஞ்சிக்கப்படுகின்றன
எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்
ஆப்பிளிலா இருந்தது பாம்புகள்
ஆதாமிலல்லவா இருந்தது பாம்புகள்
நாவடிக் கட்டளை ஆங்கிலத்தில்
நடிப்பறியா நடிப்புச் சாதுர்யத்தில்
கரைகண்ட பாம்புகளைக் காண
எங்கே செல்ல வேண்டும்
வயல்வெளிப் பாம்புகள்
வெட்டிக்கொண்டு சாகும்
மூர்க்க முட்டாள் பாம்புகள்
அலுவலகப் பாம்புகளின் கைகளிலோ
நஞ்சு கக்கும் கோடரியே இருக்கும்
காணும் கண்களுக்கு மட்டும்
வெண்ணிற ஆடை மட்டுமே தெரியும்
எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்
ஆப்பிளில் இருந்ததா
அல்லது
ஆதாமில் இருந்ததா பாம்பு
இத்தனைப் பாம்புகளின்
முட்டைகளையும் யார்தான் இட்டது
உன்னை நான்
அள்ளியெடுத்ததில்லை
ஆனால்
உன்னை என் உயிருக்குள்
மெத்து மெத்தென்று உணர்கிறேன் 
கண்ணே
நீ என்னிடம்
பேசியதே இல்லை
ஆனால்
உன் குரல் எனக்குச் சன்னமாய்
மிக அருகில்
கிசுகிசுப்பாய்க் கேட்கிறது
செல்லம்
என்னை உனக்குத் தெரியாது
நான் உன்னைக் கண்டதே இல்லை
ஆனால் உன்மீது நான்
யுகங்களாய் நீண்ட
வெறியன்பு கொண்டிருக்கிறேன்
உயிரே
*
நேற்று பார்த்த படத்தில் வந்த இந்த வசனம் தந்த பாதிப்பில்
I never held you but I feel you
You never spoke but I hear you
I never knew you but I love you

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பயணம் ஒருவழியாய்
முடியத்தான் போகிறது
வழியெல்லாம் உதிர்ந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றையும் அள்ளியெடுத்துத்
தங்கமுலாம் பூசிப் பூசி
நினைவுப் பொந்துகளில்
பத்திரப்படுத்தினேன்
ஆனால்
நொடிகளில்
தன் பித்தளை முகம் காட்டுவதை
அந்நிமிடங்கள் நிறுத்தவே இல்லை
ஆக
நான் தான் போலியாகிப்
பல்லிளித்து நின்றேன்
பித்தளை தன் நிசத்தில்
நிமிர்ந்துதான் நின்றது
என் நாட்கள்தான் போலி
பித்தளையின் நாட்களோ
அச்சு அச்சு அசல் அசல்
வெற்றிபெற்ற
மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
கண்ணதாசா அடப்பாவி
கொல்றியடா
இந்தக் கல்வியால் பயனடைபவர்கள்
பெரு நிறுவனர்கள் மட்டுமே
நம்மை அவர்களுக்காக
உழைக்கத் தயாராக்குகிறார்கள்
வாழ்நாளெல்லாம்
நாம் அவர்களுக்காகவே உழைக்கிறோம்
சின்னச் சின்னப் பகுட்டுகளை
ஜென்ம வசதி என்று
வாய்கிழியச் சொல்கிறோம்
அறம் வலியுறுத்தும் கல்வி
நம்மிடம் இல்லை
இருந்தால் மனிதநேயம் பெருகும்
மனிதம் வாழும்
அறம் வலியுறுத்த எதுவந்தாலும்
அதை அப்படியே குறைகூறித்
தூக்கி எறிந்துவிடுகிறோம்
தூக்கி எறிந்தால் மட்டுமே
நாம் பகுத்தறிவாளர்கள் என்றுவேறு
சொல்லிக்கொள்கிறோம்
மூடநம்பிக்கைகளை அழித்துப்போடும்
கல்வி நம்மிடம் இல்லை
எது அறிவு என்று சொல்லித்தரும்
கல்வி நம்மிடம் இல்லை
எது உண்மையான வாழ்க்கை என்று
வரையறுக்கும் கல்வி நம்மிடம் இல்லை
எல்.கே.ஜி க்குக் கதறிக்கொண்டுபோகும்
பிள்ளையைத் தயார் படுத்தி
படுத்தி எடுத்து அனுப்பிவைக்கும்
பெற்றோர்களின் கண்களில் மிளர்வது
டை கட்டிய உத்தியோகம் மட்டுமே
டாக்டராவதைவிட
மனிதனாவது முக்கியம்
எஞ்சினியராவதைவிட
நல்லிணக்கம் பயில்வது முக்கியம்
வக்கீலாவதைவிட
வன்முறையற்றவனாவது முக்கியம்
கணிப்பொறியாளனாவதைவிட
சக உயிர் நேசிப்பவனாவது முக்கியம்
கலெக்டராவதைவிட
ஊழலற்றவனாவது முக்கியம்
கல்வியே உனக்குக்
கல்வி கற்றுத் தரப்போகும்
கல்வி எப்போது வரப் போகிறது