03 உன் மௌனம்

மௌனம், அது விவரிக்கவே முடியாத ஒரு சொல்.

அது எதைச் சொல்லும் என்று சற்றே சிந்திக்கத் தொடங்கினால், அது காடுகொள்ளாப் பூக்களாய்க் பூத்தவண்ணம் இருக்கும், கண்டு முடியாத பேரண்டக் கோள்களாய்க் கூடிக்கொண்டே போகும், ஊற்றி முடியாத நயாகாராவாய்க் கொட்டிக்கொண்டே இருக்கும், எண்ணி முடியாத எண்ணங்களாய் பெருகிப் பெருகி நம்மை மூழ்கடித்துக்கொண்டே இருக்கும்.

என்றால், மௌனத்தின் நீள அகலம்தான் என்ன?

இந்தப் பிரபஞ்சத்தின் நீள அகலம் எது வென்றுகூட ஓர் நாள் நாம் சொல்லிவிடலாம் ஆனால் மௌனம் சொல்லும் சேதிகளின்... உணர்வுகளின்... வாழ்க்கையின்... நீள அகலத்தை மட்டும் சொல்லிவிடவே முடியாது.

அதிலும் இந்தக் காதல் இருக்கிறதே காதல். அதில் நிலவும் மௌனத்தைவிடப் பெரியது அந்தக் காதலும் இல்லை, உயிர்க் காதலியும் இல்லை.

ஆமாம் மௌனம் சூழ்ந்திருக்கும்போது எழுந்து நிற்கும் காதல் இருக்கிறதே அது சொல்லிச் சிவந்த எத்தனை உயர்வான காதலையும்விட பன்மடங்கு உயர்வானது. கைகளின் வளைவுகளில் கனிந்து கிடக்கும் எத்தனை அற்புதமான காதலியையும்விட அற்புதமானது.

அப்படியான மௌனம் படுத்தும் பாடு இருக்கிறதே அதைத் தாங்கிக்கொள்ள ஆயிரம் பல்லாயிரம் தேவர்களால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

உயிரை எடுக்கும் அந்த மௌனமே உயிரைத் தருவதாயும் நிலவும்.

அந்த மௌனம் கலைந்துவிட்டால்? எப்படி கலையும்?

ஒன்று சம்மதமாகிக் கைகூடும் அல்லது சருக்கி விழுந்து சருகாகும்.

ஆனால் அது சம்மதத்தையே தொட்டு சந்தோசத்தையே அள்ளிக் கொட்டினாலும், மௌனத்தில் தவித்துத் தவித்து ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஒரு கோடி முறை பூத்துப் பூத்து சொர்க்க மணம் வீசிய அந்த விவரிக்க முடியாத ஆனந்த சுகத்தை இழந்ததாகவே ஆகிப்போகும்.

இங்கே ஒரு கவிஞன் தன் காதலியின் மௌனத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து வார்த்தைகளாய் வெடித்து ஒரு கவிதை எழுதுகிறான், வாருங்கள் வாசிக்கலாம்.



உன் மௌனம்
நித்தமும்
ஒரு புதுப் புத்தகசாலை

உன்
மௌனத்துக்கு
உரை வரையத் துவங்கித்தான் -

என்
தூரிகைக்குப்
பொற்சிறகுகள் வெடித்தன

என்
வெற்றுத்தாள்கள்
தங்கத்தாள்களாக்கப்பட்டு
வைர வைடூரியங்கள்
பதிக்கப்பட்டன

என்
கனாக்களுள்
இந்திர நந்தவனங்களத்தனையும்
நறுமணத்தைக் கொட்டிவிட்டு
விதவைகளாய்த் திரும்பின

அடியே
உன் மௌனமென்ன
என் உயிரைக் கிள்ளிவிடும்
பவள நகங்களா

என்
உறக்கத்தைத்
தின்று தீர்க்கும் பசிப்பற்களா

நிலவொளீ...
உனக்குத் தெரியுமா

மார்கழிப் பிஞ்சுப்புல்
வைகறைப் பொழுதுகளில்
பனிப் பன்னீர்க் குடங்களைக்
கர்வமாய்ச் சுமக்குமே

அப்படித்தான்
என்
உட்கிளியும்
உன் மௌனத்தைச் சுமக்கிறது

ஒருமுறை
என் உறங்கா விழிகளின்
இமைக்கதவுகள்
அடித்து விலகும்முன்
ஓராயிரம் முறை
உன்
மௌனத்தின் நினைவுகளாய்த்
துடித்து நெளிகிறது

இந்த உன்
மௌனம் கலைக்கப்படும்
பொற்பொழுது எப்பொழுது

உன்
பொல்லாத
மௌனத்தை இழுத்து
முடிவுரை சொல்லச்செய்யும்
திடமனமும் எனக்கில்லை

அடர்ந்து கொண்டே போகும்
அதன்
அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும்
உர உயிரும் எனக்கில்லை

No comments: