உலகமுதல் இணையநூல் வெளியீடு 3


கவிஞர் மதுமிதா வாழ்த்துரை
ஞான வெட்டியான் வாழ்த்துரை
கணிஞர் கீதா வாழ்த்துரை
ஜாவா குமார் வாழ்த்துரை
முனைவர் நா. கணேசன் வாழ்த்துரை
நியூ மெக்ஸிகோ வாசன் வாழ்த்துரை


கவிஞர் மதுமிதா, இராசபாளையம்
இலக்கணப்போலி என தன்னடக்கமாய் குறிப்பிட்டுக்கொண்ட கவிஞர் (கவிதை நடையில் கட்டுரைகளில் அற்பதமாய் பின்னுகிறார். ஏனோ கவிஞன் என ஒப்புக்கொள்வதில்லை. ஒருவேளை பா.ரா அவர்களுக்கு கவிதை பிடிக்காதென நேரடியாய் சொல்வது போல் வேறு யாரேனும் சொல்லிவிடக் கூடாதெனும் முன் ஜாக்கிரதை உணர்வாயிருக்குமோ ஜெயந்தி & ரமா ) மன்னிக்கவும் உரைநடைக்கார் இதழாசிரியர்

தலமையுரை ஆற்ற வந்திருக்கும் திரு.மாலன் அவர்கள் செவ்வனே தலைமை உரை ஆற்றியுள்ளார்.

அவர் கூறியது போல் ஓர் பொன் வேளையின் வைரத் துளிகளில் பங்கு பெறுகிறோம் என்ற உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

அதுவும் தமிழுக்காக , புகாரியின் கவிதைக்காக என்கையில் பெருமித உணர்வு ஆட்கொள்கிறது

இதை இந்த நிமிட அனுபவத்தை உணர்பவர்களுக்கே உணரமுடியும். மாலனின் அதே உணர்வு தான் எனக்கும் என்பதால் அவரின் வார்த்தைகளை அவ்வண்ணமே வழிமொழிகிறேன்.

இனிப்பு இனிப்பாய் இருக்கிறெதென சுவத்தவர்களாளேயே சொல்ல இயலும். இந்த வாய்ப்பு இந்த நிமிடம் கிடைத்தமைக்கு இணைய தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புவியெங்கும் புகாரியின் கவிதை மணம் பரவிட வாழ்த்துக்கள்.


ஞானவெட்டியான் ஜெயச்சந்திரன், இராசபாளையம்.
அன்பு கெழுமிய தமிழ் நெஞ்சங்களே, வணக்கம்.
என் அவசரமறிந்து உதவிய அன்புத் தம்பி ஆல்பர்ட்டுக்கு நன்றி. முத்து முத்தான முப்பது கவிதைகளை அள்ளித் தந்திருக்கும் தம்பி புகாரியே! தினமொரு குறள் போல் தினம் ஒரு கவிதையாய் ஒரு மாதம் எழுதினாயோ? முப்பதிலும் என்னை ஈர்த்தவை "பஞ்சபூதம்"தான். தத்துவங்களைச் சொல்லாமல் பாதியையும் துள்ளல் நடையில் மீதியைச் சொல்லியும் முடித்துள்ளாயே. அருமை. அருமை.

"பஞ்சபூதம் தண்ணீர்

பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்"


ஆனால் பிறக்கும் முன் பாற்கடலில் பள்ளிகொண்ட எம்பெருமாள் போல் அக்குடத்துள்தானே இருந்தாயெனவும்,

"தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்"


பாலெனும் தண்ணீரும் அன்னையின் உதிரமே எனவும் சொல்லாமல் சொல்லிய பாங்கு என்னைக் கவர்ந்ததையா.

"கண்ணீரும் தண்ணீர்தான்
கருணைகூடத் தண்ணீரே
ஈரமில்லா உள்ளத்தை
இதயமென்று யாருரைப்பார்"


ஈரமில்லா உள்ளம் இதயம் இல்லை. இதயம் இல்லையெனில் உணர்வில்லை; சடம்தான். ஆகவே ஈரமில்லா

இதயத்தோரே! இனியாகிலும் கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறாயோ!

"ஓர்+அத்தா+நாட்டாரே"(ஒரத்தநாட்டார்)

(அரங்கில் பலத்த கரஒலி எழுந்து அடங்குகிறது...)


"நெருப்பு

வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்"


விழிகள் மலர்ந்தால்தான்(பூரணை) கலைகள் மலரும். எத்தனை உயர்வான தத்துவக் கருத்து.

"வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம்"


ஆதவனின் எச்சம் வெளிச்சம். ஆதவனோடு நிலவும் கூட கிரகணம். ஓ! ஓ! அதுதானா நெருப்பின் மச்சம்?

இடையிடையே அறிவியல்............ பாராட்டுக்கள்.

"நிலம்

எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை"


ஆம் ஐயா. அதில் விளையாததுவுமுண்டோ ? அகழ்வாரையும் தாங்கும் பொருமை கொண்ட அன்னைதான்.

"காற்று

இலைகள் ஊடே காற்றின் ஜாலம்
இசையைத் தேடும் ஆவல் நெய்தது
கலைகள் யாவும் காற்றின் ஆடல்
இலக்கியம் கூட காற்றின் தேடல்"


மூங்கிலில் கற்றோடி இசை வந்தது என்பர். ஆனால் இலயசைவினில் இசையைக் காட்டிவிட்டீர்.


"ஆகாயம்

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்"


ஆகாயம்தான் மூலம்; முடிவுமஃதே. தத்துவத்தின் சாரம். நெஞ்சம் அறிந்தது கொஞ்சம். முழுவதும் அறியுமுன் ஆறடிக்குள் தஞ்சம். மனித வாழ்வதுதான். நிலையாமை. சூக்குமத்தில் நான்கு நிலைகள். அறிவு, உணர்வு, கருத்து, நினைவு. இலக்கியவாதிகள் அறிவுடன் நின்றுவிடுகின்றனர். கவிஞன் உணர்வுகளைக் கவிதைகளாக்குகிறான். ஆக கவிஞன் இரண்டாம் நிலைக்கு உயர்ந்து விடுகிறான்.

தம்பி! இறை அருளால் உணர்வுகள் பெருகட்டும். கவிதைகள் மடை திறந்த வெள்ளமெனப் பெருகட்டும். வாழ்க! வளர்க!


கவிஞர் மதுமிதா, இராசபாளையம்
புகாரிக்கு வாழ்த்துக்களுடன்...
அன்புடன் இதயம்

அன்பான இதயத்துடன் புகாரி அருமையான கவிதைகளை அள்ளி அள்ளி அளித்திருக்கிறார்.

மனசுக்குள் எழுகின்ற
உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற
மனசு

மூச்சுக்குள் உள்ளாடும்
தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும்
மூச்சு


ஆஹா! தமிழின் மீதான நேசம் தமிழையே நேசிக்கச் செய்யும் தமிழுக்கு ஒரு அற்புதகவி இங்கே. வாழ்க தமிழ்! வளர்க புகாரி!

மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்


ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு


அன்பின் சிதைவிற்கு ஆட்பட்டாலும் தன் நிலை மறவா மனம் வேண்டும் மீண்டும் மீண்டு எழ வேண்டும். உன்னத மனோபாவம்.

மரணத்தின் முத்தச் சத்தம்
காதுக்குள் கேட்கும் போதும்
அகலாத முயற்சி வேண்டும்
அயராத உழைப்பு வேண்டும் - தோழா
வெற்றி உன் காலடி முட்டும்


கண்களின் அருவியை நிறுத்த கனலாய் எழுந்த கவிதை கவலையை அழிக்க என்றும் கனன்று கொண்டிருக்கும்

கெடுப்பவன் என்றும் கெட்டே சாகின்றான்
கொடுப்பவன் தானே சரித்திரம் ஆகின்றான்
அடுப்பினை எரிக்க அவசரப் போர்வேண்டும்
அத்தனை மாந்தரும் உண்கிற நிலைவேண்டும்


போரை நிறுத்துவதற்காக கவிதை. அதில் தனியொருவனுக்குணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் பாரதியின் பாடலின் உணர்வு அவசரப் போர் அடுப்பினை எரிக்க. கொடுப்பதில் இன்பம் மட்டுமல்ல சரித்திரம் ஆளும் உண்மையும்.

தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்

நிலமும் தின்னும் நீரும் தின்னும்
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்
நெருப்பே மூலம் பசியின் உருவம்
நெருப்பின் விசையே யாவும் எங்கும்

கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை

உதடுகள் தொட்டு ஒத்தட முத்தம்
ஓசைகள் இன்றி ஒத்துவதாரு
செவிகள் தொட்டு நித்தமும் கீதம்
சுரங்கள் சேர்த்துப் பாடுவதாரு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே


பஞ்ச பூதங்களின் வர்ணனைகள் படித்து படித்து இன்புற வேண்டும் வஞ்சக மனம் கூட வாஞ்சை கொள்ளும் வடித்து வடித்து வார்த்தைகள் கோர்த்ததால்.

எனக்குக் கணினி வேண்டாம்
உன் மடிதான் வேண்டும்
அமெரிக்கா வேண்டாம்
அப்பாதான் வேண்டும்


இதை விடவும் உறவின் மகிமையை உள்ளது உள்ளபடி உணர்வு பூர்வமாய் உண்மையாய் சொல்ல இயலுமா?

ஒரு பனித்துளி
தென்னிந்திய
புழுதிப் புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில்
அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை


குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் குடியேறி விட்டார் மக்களின் இதயங்களில் வையகம் போற்ற பிறந்த அவரை வைர வரிகளில் வாழ்த்திய புகாரி ! கவிஞனே ! புகழோடு வாழ்வாய் !

நான்
எத்தனையோ தூரமாய்
ஓடி ஓடிப் போனாலும்
என்னை
இழுத்து இழுத்து
உன் நினைவு வனத்திலேயே
கொண்டுவந்து விடும்
.....
என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய


காதல் வசப்பட்ட மனம் கடந்த காலங்கள் கடந்தாலும் வரும் காலங்கள் பிறந்தாலும் வழங்கிக் கொண்டுதான் இருக்கும் விசித்திரங்களை. காதல் தன் வசமான அனைவருக்கும் அப்பேற்பட்ட விசித்திரங்களை அள்ளி அளிக்கும் கூடையாய் இருப்பதால்

மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே


கண்ணதாசன் வரிசையில் கவிகள் ஆயிரம் கண்கள் கலங்க கவிபாடிய கவிஞனே நீண்ட அவ்வரிசையில் நீயும் முதல் வாழ்த்து பெறுவாய்.

தமிழினி
மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை
விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே


தமிழை வாசிக்கும் தமிழை நேசிக்கும் தமிழை சுவாசிக்கும் தமிழ் நேயனே தமிழில் நீங்கா இடம் பெறுவாய்

அரியானாப் பெண்ணின்
ஆகாய வெற்றி
இந்தியத் தலையில்
இன்னுமொரு மகுடம்
மகுடத்தின் கொடிகள்
அரைக்கம்பம் பறக்க
மறைந்தாயே தோழி
முக்காலும் வாழி


அந்த ஏழு வீரர்களுக்கான பாடலில் கல்பனா சாவ்லாவின் கனவுகளை மெய்ப்பிக்க மேலும் பல இந்திய உயிர்கள் உயிர் பெறட்டும்.

மண்ணே புகலிடமே - என்றன்
மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே - நன்றி
ஊற்றே உயிர்தனிலே


மனம் கலங்கிய மனிதர்களுக்கு புது வாழ்க்கை காட்டும் மற்றோர் தாய்மடிக்கு மனம் நிறைந்த நன்றிகள்

அன்புடன் இதயம் , எழுதப்படாத கடிதம் இரண்டுமே காதலின் புது பரிமாணங்களைக் காட்சிப்படுத்துகிறது. அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பு முழுவதுமே அன்புமயமாய் உள்ளது. மொழியின் மீதான, நாட்டின் மீதான , சக மனிதனின் மீதான , தாயின் மீதான அனைத்துவித அன்பின் மொழிகளை அளித்த புகாரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன் மதுமிதா

கணிஞர் கீதா, டொராண்டோ
இன்னொரு மூலையிலிருந்து -
ஆல்பர்ட்டின் முகவுரையும், மாலனின் பேச்சையும் படித்த போது, நானே ஒரு அரங்கத்திலிருந்து கவனிப்பது போல் தோன்றிற்று.
'reality TV' என்று சொல்லிக் கொண்டு கற்பனையை அடியோடு வேரறுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எந்த வித ஊடகங்களின் துணை இன்றி வார்த்தைகளால் புத்தக வெளீயீட்டு விழா
நடத்துபவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகளில்லை !

அருமையான் யோசனை!

அற்புது(ந)மயான நடந்து கொண்டு இருக்கிறது ....

"நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டார் சிலர்"


என்ற கவிஞசரின் மனக்குமறலை அடியோடு அறுத்து எறிய இணையத்தில் முதல் கவிதைப் புத்தக விழா நடந்து கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள் கவிஞரே -

"இக்குழு அக்குழு என்ற
இணைய குழுக்கள்"

இருந்தும், அனைவரும் சேர்ந்து கொண்டாடவும் ஒரு வழி வகுத்து விட்டீர்கள் !! பெரியவர்கள் விழா இனிதே நடந்து முடிவுற எல்லாப் பணிகளையும் செவ்வனவே செய்து வர,

ஒரு முலையிலிருந்து பெருமிதத்தோடு, தமிழ் செழித்து வளரும் இவர்கள் துணையோடு என்று நம்பிக்கையுடன், அனைவருக்கும் நன்றி கூறி

குமார், ஜாவா
புரிந்தும் புரியாததுமாக அரங்கத்தில் நுழைந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. புரிபட சில இணையவெளி மடல்களும் கனேடியர்களின் கைதட்டல்களும் தேவையாயிற்று. இணையத்தில் தமிழ் உலகக்
கவிஞனின் நூல் வெளியீட்டு விழா.

புதுமையான இந்த விழா, அற்புதம். கவிஞர் புகாரியின் கவிதைகளை அவ்வப்பொழுது தமிழ் உலகத்தில் படித்ததுண்டு. நெகிழ்ததுண்டு. சிந்தனையில் ஆழ்ந்ததுண்டு. நம்பிக்கை கொண்டு
எழுந்ததுண்டு. அவர் கவிதைகள் என் மனதில் செய்த மாயங்களை அந்த படைப்பாளியுடன் இதுவரை அவருடன் பகிர்ந்ததில்லை. அதற்கு இதோ ஒரு வாய்ப்பு. அரங்கத்தின் ஒரு மூலையில் நானும்
ஒன்றிவிடுகின்றேன். விழா இனிதே நடந்தேறட்டும்.

முனைவர் நா. கணேசன், அமெரிக்கா
அரிய கவிஞர் ஆன கெழுதகை நண்பர் புகாரிக்கு வாழ்த்துக்கள்

வாசன், நியூ மெக்ஸிகோ
நண்பர் குமார்,கீதா ஆகியோரின் அஞ்சல்களைப் படித்த பிறகு, பழைய அஞ்சல்களை படித்ததில் நிழல்வெளியில் நடைபெறும் முதல் தமிழ் நூல் வெளியீட்டு விழா இது என்பது புரிந்தது. காலம்
தாழ்த்தி புரிந்து கொண்டதால், சாளரத்திற்கு அருகில் நிற்க மட்டுமே இடம் உண்டு என்ற வகையில், அங்கே நின்று விழாவை கண்ணுற எண்ணியுள்ளேன்.
புதுமையான முறையில் நடத்தப்படும் இவ்விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துகள்.

No comments: