நித்திரைகள் பத்து


நான் அசைகள் பிரித்து சந்தக் கவிதைகள் எழுதிப்பழகிய ஆரம்பக் காலக் கவிதை இது. இதை எழுதும்போது நான் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதற்கு எத்தனை நீளமாக கவிதை எழுதமுடியுமோ அத்தனை நீளம் எழுதுவது. பின் அதை வாசித்து வாசித்து மகிழ்வது. இந்தக் கவிதையில் எதுவெல்லாம் நித்திரையாகலாம் என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு பத்தியாக எழுதினேன். அது இன்னும் பசுமையாக எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அப்போது என் வயதென்ன என்பதுதான் நினைவில் இல்லை. நித்திரைகள் பத்து என்றுதான் இந்தக் கவிதைக்குத் தலைப்பிட்ட ஞாபகம். பின்னொருநாளில் ஏற்பில்லாமல் போன இரண்டு பத்திகளை நானே வெட்டியெறிந்திருப்பேன். ஏன் வெட்டினேன் அப்படியே விட்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. அந்த நித்திரைகளும் ஞாபகம் வந்தால் ஒருநாள் இதனுடன் கோத்துவிடுவேன். எழுதும் கவிதைகளெல்லாம் பரிசு வாங்க வேண்டுமா என்ன? ஒரு ஞாபகத் திட்டாக இருந்துவிட்டுப் போகட்டுமே!


விழித்தாளில் கவியேந்தி
விரல்நாவில் மொழிசிந்தி
அழியாத நினைவுகளை
ஆளுக்கொரு பரிசாக்கி
பழிச்சொல்லை விதித்தலையில்
பக்குவமாய்ச் சூட்டிவிட்டு
நழுவுகின்ற நாகரிகம்
நற்காதல் நித்திரையில்

கண்களினால் அழைப்பிட்டு
கட்டுடலை வெளிக்காட்டி
பெண்ணினத்தின் நாணமின்றி
பேய்க்காமக் காளையிடம்
தன்னைத்தான் விலைபேசும்
தரம்குறைந்த பெண்களின்று
மண்டலத்தில் மலிந்ததெலாம்
பெண்மைகொண்ட நித்திரையில்

கட்டிலிலே காணுகின்ற
காமமெனும் தேனமுதை
மொட்டுமுகம் மலரமணம்
முடித்துவந்த நாள்முதலாய்
கட்டியவன் கையணைவில்
கண்டிடாத மனைவிவேறு
கட்டழகன் காணுவது
ஆண்மைகொண்ட நித்திரையில்

பத்துமாத பந்தமுடன்
பெற்றெடுத்தப் பிள்ளையினைத்
தத்தென்ற முறைகூறித்
தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு
நித்திரையைக் கண்டுவிடும்
நெஞ்சமற்ற பெண்களின்று
எத்திசையும் இருப்பதெலாம்
தாய்மைகொண்ட நித்திரையில்

மூவெட்டு வயதினிலும்
முறையாகப் பெறுகின்ற
பூவையரின் பொன்னாளாம்
பூப்பெய்தும் நன்னாளை
காவிரியாய்க் கண்பெருக
கண்டிடாத பாவையவள்
சாவினுக்குள் சரிவதெலாம்
இயற்கைகொண்ட நித்திரையில்

செய்யாத கொலையொன்றைச்
செய்தானெனக் கூண்டிலேற்றி
பொய்யான சாட்சிகளின்
புளுகுகளில் தீர்ப்பளித்து
மெய்யான நிரபராதி
மரணப்படி மிதித்தபின்னர்
மெய்யறியும் மேன்மையெலாம்
நீதிகொண்ட நித்திரையில்

காலமெலாம் மெழுகாகக்
கண்ணீரில் சுகங்கண்டு
வாழவெண்டும் என்மகனென
வாழவைத்த தெய்வங்களை
மாலையிட்ட மறுநாளே
மணந்தவளின் சொல்கேட்டு
காலடியில் கசக்குவது
ரத்தபாச நித்திரையில்

இன்னுமின்னும் அவனியிலே
எத்தனையோ நித்திரைகள்!
என்றென்றும் நீதிநாடி
எங்கெங்கும் அன்புசிந்தி
ஒன்றுசேர்ந்த ஞானத்தால்
ஒருகுறையும் இன்றிமக்கள்
நின்றுவாழ நினைப்பினெந்த
நித்திரைக்கும் நித்திரைதான்

No comments: