விமரிசனம் - மதுமிதா - பச்சைமிளகாய் இளவரசி


தத்துவ வண்ணம் பூசிக்கொண்டு ஜொலிக்கும் கவிதைகள்...

கவிஞர் புகாரியின் தேடல்கள் காதல், நட்பு, உறவுகள், இயற்கை என எல்லா பக்கமும் படர்ந்து வாழ்க்கையின் மீதான தேடல்களாக குவிகிறது. கவிதைகள் தத்துவ வண்ணம் பூசிக்கொண்டு ஜொலிக்கிறது.

'புனிதமானது' முதல் கவிதையின் ஆரம்பமே தத்துவம் சார்ந்து தொடங்கப்பட்டு, தத்துவத் தேடலின் தரிசனத்தில் பெறப்பட்ட ஞானமாகப் பரிணமிக்கிறது.

புத்தம்புதுத் திருப்பங்களின்
படையெடுப்போ ஓய்வதில்லை

பிஞ்சு நெற்றியில்
புதிய சுருக்கங்களைப்
பிறப்பிக்காமல் விடுவதில்லை


இந்த ஞானம் எத்தனை பேருக்கு வாய்க்கும்.

வாழ்க்கையின் திருப்பங்களோ, பாதையின் போக்கோ புதிராக இருப்பதாலேயே வாழ முடிகிறது என்பதும் மெய்யாகித்தான் போகிறது.

'சும்மா இரு' கவிதையிலோ குழந்தையாகவே மாறி பலப்பல கேள்விகளை முன்வைக்கிறார்? குழந்தையின் கேள்விகளா அவை? தகப்பன்சாமியின் கேள்வியாகத் தோன்றுகிறது.

இனி எப்படித்தான் நான்
சும்மா இருப்பது?


கவிஞரே தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள். காலம் பதில் சொல்லும்.


தமிழ் எங்கே வளருகிறது? தமிழ்நாட்டிலா? இந்தியாவிலா? வெளிநாட்டிலா? தமிழ் பாடத் திட்டத்தாலா? தமிழ் திரைப்படத்தாலா?

நட்புகள், இணையத் தமிழ் வளர்ச்சியினைக் குறித்த இந்த 'இணையம் என்றொரு' கவிதையைப் பாருங்கள்:

கண்கள் காணாத
நட்பில் வாழ்வதும்
கருத்தைக் குறிவைத்த
கலப்பில் மலர்வதும்


*

இணைய நதிகளில்
தமிழும் வளருது
தமிழர் பண்புகள்
தரணி நிறையுது


இணையம் தமிழும் வளர்க்கிறது என்பது நூறு சதவிகித உண்மை. இனி வரும் வரலாறு இதை மெய்யென்றுரைக்கும்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? உன் கடவுள் உசத்தியா? என் கடவுள் உசத்தியா? கண் விழித்து கண் மூடும் ஒரு பகலுக்குள் எத்தனை அழிவுகள் கடவுள் குறித்த சித்தாந்த வேறுபாட்டினால்.

பல தாலாட்டு பாடல்கள் கேட்டிருக்கிறோம். உறங்க வைக்கும் வகையில் கடவுளுக்கே தாலாட்டு பாடுகிறார் கவிஞர்.


இங்கே பல விவரணைகள் கொடுத்துவிட்டு, கவிஞர் முத்தாய்ப்பாய் சொல்கிறார்:

நேற்று நீ யாரென்று
அறிந்தோரும் யாரிருக்கா

நாளை நீ யாரென்று
அறியலாமோ ஆண்டவனே
அன்றைக்குக் கண்விழிப்பாய்
அதுவரைக்கும் கண்ணுறங்கு.


எனக்கு மிகவும் பிடித்த சொல் மௌனம். மௌனம் குறித்து மொத்தமாய் ஆய்வுக் கவிதை படைத்தளித்திருக்கிறார் கவிஞர்.

மௌன முத்தமே மிக அழுத்தமானது.

என்ன ஒரு ரசனையான, அருமையான வரி. இதை மௌனமாய் எப்படி விமர்சிப்பது.

சுனாமியின் மறக்கவியலா பயங்கரம் இன்னும் தூக்கத்தில் எப்போதேனும் துடிதுடித்து எழச் செய்துவிடும். கடற்கரையில் இருக்கும்போது முன்பு போன்ற இனிமை உணர்வை மீறி ஆறாத சுனாமி வடு தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இதோ சுனாமி கவிதையில் பாருங்கள். படுத்துக் கிடக்கும் கடல் எழுந்து நின்றால் என்னும் உவமை எவ்வளவு பூதாகரமாய் காட்சி தருகிறது.

கடலின் இடுப்பை
நிலம் ஒடிக்க ஒடிக்க
கதறிக்கொண்டு வந்த
ஒப்பாரிதானே இந்தச் சுனாமி


இது காட்டும் புவியியல் ரீதியான உண்மை, மனம் வலிக்க வலிக்க வாசிக்கச் செய்கிறது.

வீடே உலகம், வீடே சொர்க்கம், வீடு சிறை, வீடு விலங்கு என வீடு குறித்த பல பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. வீடென்றால் எப்படி இருக்க வேண்டும்.

ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல் பூத்திருக்கும் வீடு


இப்படி வீடிருந்தால் எதுவும் சாத்தியமே இவ்வுலகில். உலகமே இப்படியொரு வீடாக இருக்கக்கூடாதா எனும் பேராசை மேலோங்குகிறது. அதன் பிறகு எந்த தீவிரவாதமாவது எட்டிப்பார்க்கவியலுமா? இன்பம் மட்டுமல்லவா சாத்தியமாகும்.

பெண்டாட்டி
பிறந்தகம் போனால்
வரும் வரை காத்திருக்கலாம்
கண்ணில் பொங்கும்
புதுப்பிக்கப்பட்ட காதலோடு

மின்சாரம் போனால்?

.
முகத்திலறையும் உண்மையை தோலுரித்துக் காட்டுகிறார்; மின்சாரத்தைச் சார்ந்து எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்கிறோம்; மின்சாரமில்லாமல் எப்படி வாழவியலாது என்பதன் சித்திரம் 'கடத்தப்பட்ட நகரங்கள்' கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் எவ்வகை இயற்கை இன்பங்களையெல்லாம் தொலைத்திருக்கிறோம் என்பதையும்
பதிவு செய்கிறார் கவிஞர். மின்சாரம் பார்வையிலிருந்து எவற்றையெல்லாம் மறைக்கிறது. அளப்பரிய ஆகாயத்தையே மறைத்தும்விடுகிறது.

நேற்றுவரை
கண்ணில் தெரியாத வானம்
ஆயிரம் கவிதைகள் சொன்னது
.

பச்சை மிளகாய் இளவரசி கவிஞரின் மகள் குறித்த கவிதை. நூலின் கடைசிக் கவிதை. நூலின் தலைப்புக்கான கவிதையும்கூட. தந்தையின் மீது கோபம் கொள்ளும் மகளின் அழகை என்னமாய் கவிதை செய்திருக்கிறார். பாசவலையாய் பின்னியிருக்கிறார்.

நீளும் நாக்கின் நுனியோரம்
பொன் ஊசி உறைப்புச்
சிங்காரி


பாசத்தின் உச்சம் பாருங்கள்.

தன்னை மகளாய் ஈன்றவனை
மன வயிற்றில் சுமந்து
பெற்றவளாய்


மகளை பெற்றவளாய் கருதச் செய்கிறது.

பச்சை மிளகாய் இளவரசி - அழகிய கவிதை இளவரசி.

அன்புடன்
மதுமிதா

No comments: