கண்ணீரே


கடலிலிருந்து
கரைக்குப் புறப்படும்
ஒரே நதி
நீ

வேரிலிருந்து புறப்பட்டு
இலைகள் சொட்டும்
ஒரே மழை
நீ

துயரத்தின் தாகம்
துப்பும் குடிநீர்
நீ

கரைபுரளும்
ஆத்திரக் கற்களுக்கு
அணைகட்டும் நீர்
நீ

தற்கொலைக்
கிருமியின்
தடுப்பூசி மருந்து
நீ

மனத் தவளையின்
நெகிழ்ச்சிக் குளம்
நீ

உன்னை ஏன்
வேண்டாமென்கிறான்
மனிதன்?

அறிவும் நீயும்
ஆணும் பெண்ணும் போல

அறிவு என்பது
சக்கரம்
கண்ணீர் என்பது
கருணை

கருணையோடு
சக்கரம் சுழன்றால்தான்
இனிமையோடு உலகம் சுழலும்

உன்னைக்
கழித்துவிட்டால்
மண் வெறும் மயானம்தான்

No comments: