வளைகுடா தந்த வாழ்வு


வேலைகொடு வாட்டமெடு என்றேன்
வேதனையைத் தீர்க்கவில்லை நாடு
வேளைக்கொரு விண்ணப்பம் போட்டும்
வெறுமையிலே தனிமையிலே அலைந்தேன்


பாலுக்கழும் பிஞ்சுக்கனி போலே
பலநாளும் வேலைக்கழும் நெஞ்சம்
நாளுக்கொரு நாக்கின்விசம் ஏற
நரகத்தை முழுதாகக் கண்டேன்


காலைமுதல் காலைவரைக் கற்றேன்
கடன்பட்டுப் பட்டத்தைப் பெற்றேன்
சோலைதனில் ஓடும்மான் போலே
சொர்க்கத்தின் பக்கத்தில் செல்ல


நாளும்புதுக் கனவில்நான் மிதந்தேன்
நந்தவன நினைப்பில்தினந் துயின்றேன்
ஏழையெந்தன் வயிற்றுக்குக் கூட
எங்கேயும் இல்லையொரு வேலை







வேருக்கு நீரூற்ற வேண்டும்
விறகாகிக் காய்வதற்கு முன்னே
யாருக்கும் வேலையெங்கும் உண்டாம்
எரிக்கின்ற பாலைவன மண்ணில்


ஊருக்குள் சேதியொன்று கேட்டேன்
உள்ளத்தைக் கேள்விகளால் தீய்த்தேன்
போருக்குள் புகுவதாக எண்ணி
புகுந்தேனொரு பாலைநில மண்ணில்


சாலையோரம் இல்லையெனில் என்ன
சம்பளத்தில் இருக்கிறதே பசுமை
பாலைநிலம் என்றபோதும் இங்கே
பசுமையாகக் கழிகிறதே வாழ்க்கை


ஆலைகளில் கதவடைப்பு சத்தம்
அலையலையாய் ஊர்வலத்தின் கோஷம்
நாளுக்கொரு கொடிதூக்கும் நாசம்
நடுவீதியில் சண்டையிட ரத்தம்


வேலைக்கெனக் கேட்டுப்பெறும் லஞ்சம்
வேளைக்கொரு ஊழல்செயும் வஞ்சம்
நாளுமிதைக் கேட்டேன்நான் அங்கே
நல்லவேளை எதுவுமில்லை இங்கே


தேசத்தை விட்டுவந்த மக்கள்
திரும்புகின்ற எண்ணத்தில் இல்லை
நேசமுடன் மனைவிமக்கள் சூழ
நெடுநாளாய் வாழ்கின்றார் இங்கே






காசின்றிக் கிட்டாத சிகிச்சை
கைகட்டி என்தாய்முன் நிற்க
பாசத்தின் பிறப்பான அவளின்
பாதிவுயிர் பிரிந்தநிலை மாறி


வாசமுடன் வலையவந்து கண்ணில்
வண்ணநிலா போலவந்து நிற்க
தேசத்தை விட்டுவந்த நானும்
தெளிவாக இருக்கின்றேன் இன்றே


நாளைகளோ வளமாகும் எனக்கு
நானும் ஓர் மனிதனென நடப்பேன்
மாலைவந்து விழும்தங்கை கழுத்தில்
மனம்போலப் படிப்பானென் தம்பி


நூலைப்போல் இளைத்துவிட்ட தந்தை
நுரைபூத்த பாலாகச் சிரிப்பார்
தாழைமணம் போலவாழ்வு வீசும்
தாய்விழியில் ஆனந்தநீர் வழியும்

No comments: