இறைவா உன்னைத் தொழுகின்றேன்


இறைவா உன்னை தொழுகின்றேன்

எனக்குள் நானே ஓடுகிறேன் - என்றன்
இறைவனை எங்கும் தேடுகிறேன்
வணங்கும் மௌன விழிவிரித்து - பொழுதும்
வெறுமை வீதியில் வாடுகிறேன்


விதிகள் போலே வீதிகளில் - இறையின்
வழித்தடம் ஒன்றும் கிடைக்கவில்லை
விதிகள்தாமே அவன்தேடி - என்னை
விரட்டும் மின்னல் பிரம்படிகள்


யாரோ எவரோ வந்தார்கள் - விரலை
இங்கும் அங்கும் சுழித்தார்கள்
ஆர்வம் பொங்க விழிகுவித்தேன் - கேள்வி
ஆயிரமாயிரம் கேட்டுவைத்தேன்


பேசும் எந்தன் பேச்செல்லாம் - அவனின்
பாசச் செவியைச் சேருமென்றார்
ஆசையில் ஓடித் தேடிவிட்டேன் - அவனை
அருகினில் எங்கும் காணவில்லை


அருகே எங்கும் நில்லாமல் - பேசும்
அனைத்தும் கேட்கும் ஒருவனெனில்
உருவம் என்பது இறைக்கில்லை - என்ற
உண்மைக் கருத்தில் பிழையில்லை




இங்கே இருந்து உரைப்பதையும் - உலகில்
எங்கோ மூலையில் கதைப்பதையும்
பங்கம் இன்றிக் கேட்பதனால் - அவனும்
பரந்து விரிந்து நிறைந்தவனே


அண்டம் போலப் பெருத்தவனால் - அதனுள்
அடங்கிக் கிடக்க வழியில்லை
அண்டம் என்பது வேறில்லை - அதுவே
ஆண்டவனென்றால் மறுப்பில்லை


உருவம் இல்லா இறையென்று - முன்னர்
உணர்ந்த கருத்தில் பொருளில்லை
உருவம் உண்டு இறைவனுக்கு - அதுதான்
உருவம் கொண்ட பிரபஞ்சம்


படைத்தவன் யாரெனும் கேள்வியுண்டு - இந்தப்
பிரபஞ்சமெப்படித் தோன்றியது
படைத்தவன் தனியே கிடையாது - படைத்த
படைப்பும் அவனே படைத்தவனே


தன்னைத் தானே படைத்திட்டான் - தனியே
எதையும் எங்கும் படைக்கவில்லை
தன்னைத் தானே படைத்ததனால் - அவனும்
தனக்குள் பூரணம் ஆகிவிட்டான்


தன்னைத் தானே தொழுதாலும் - மனிதன்
தெய்வம் தேடித் தொழுதாலும்
எண்ணச் சிறகால் மேலெழுந்தால் - செயல்
இரண்டும் ஒன்றெனப் புரிந்துவிடும்





தன்னைத் தானே தொழவேண்டி - எவரும்
ஆலயம் தேடி ஓடுவரோ
இந்தப் பிறப்பே பிழையென்று - அவனை
இழிவாய்ப் பழித்துச் சபிப்பாரோ


உன்னைப் போற்று உடல்போற்று - அனைத்து
உயிர்கள் பொருள்கள் மனம்போற்று
உன்னில் உயிரில் துகளெல்லாம் - இறைவன்
ஒருவன் என்றே போற்றுபோற்று


சரிகள் பிழைகள் பகுப்பில்லை - அவனுள்
சுற்றும் யாவும் தவறில்லை
திரியும் சுடரும் அவன்தானே - இந்த
நினைவே தொழுகை சரிதானே

1 comment:

cheena (சீனா) said...

இறைவனைப் புரிந்து கொள்ளும் சிறு முயற்சி. அருமையான தத்துவப் பாடல்.