4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்


வற்றாத சிறப்பும்
வளமான செல்வமும் பெற
நீதிநெறி வழியே அல்லாது
வாழும் மனித குலத்திற்கு
மேன்மை தரும்
மாற்று வழி ஏது

காப்பதால் கிடைப்பது நன்மை
நீதிநெறியை மறப்பதால்
முளைப்பது தீமை தீமை

செய்யும் செயல்களிலெல்லாம்
இயலும் வழிகளிலெல்லாம்
பொழுதுக்கும் நீதிநெறிகளையே
காத்திடல் வேண்டும்

உள்ளத்தின் தூய்மையே
உண்மை நீதிநெறி
உள்ளத்தில் கள்ளம் வைத்தோன்
செய்வதெலாம் போலி

பொறாமையை விரட்டு
உன் எண்ணங்களிலிருந்து
பேராசையை நீக்கு
உன் இதயத்திலிருந்து
கொடுங்கோபத்தைக் களை
உன் இரத்தத்திலிருந்து
கடுஞ்சொற்களை அகற்று
உன் நாவினிலிருந்து
இந்த நான்கும் போதும்
வாழ்வில் நீதிநெறி என்பது
உன் நிழலாகவே ஆகிப் போகும

பிறகு செய்வோம்
பிறகு செய்வோம் என்றே
பின்னுக்குத் தள்ளிவிடாமல்
இன்றே இப்பொழுதே
இளமைக் காலம் தொட்டே
நீதிநெறி காக்கும் நற்சேவைகள் செய்
அது உன் இறப்புக் காலத்திலும்
பொறுப்பாய் வந்து நின்று
உனக்குள் உரம் சேர்க்கும்

பல்லக்கில் பரவசமாய்ப்
பயணம் செல்கிறான் ஒருவன்
அதைச் சிரமத்தோடு
சுமந்து செல்கிறான் ஏழை
இந்த ஏற்ற இறக்கங்கள்
நீதிநெறிப் பலன்கள் என்று
ஒருபோதும் எண்ணிவிடாதே

உன் நாட்களிலெல்லாம்
நல்ல நீதிநெறி காத்து வா
ஒரு நாளையும்
வெட்டியாய் விட்டுவிடாதே
நீ காக்கும் நீதிநெறிதான்
உன்னை வலுக்கட்டாயமாய்
அடையவரும் துயரவாழ்வின்
கொடிய வாயிலை
முற்றாக அடைக்கும்
கல்லாகி நிற்கும்

நீதிநெறிகளின் வழிநடக்க
உன் நெஞ்சினில் பொங்கும்
இன்பமே இன்பம் அதுவல்லாது
வேறுவழியினில் வருவன யாவும்
வேதனைகளே அல்லாமல்
உண்மை இன்பமும் அல்ல
உயர் புகழும் அல்ல

செய்யச் சிறப்பான செயல்
ஒன்றிருப்பின் அது
நீதிநெறி காத்துச் செய்யும்
செயல் மட்டுமேதான்
நீதிநெறி மறந்த
அற்பச் செயல்களெல்லாம்
இல்லாத பழியையும் உன்னிடம்
இழுத்து வந்தே சேர்க்கும்


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

2 comments:

cheena (சீனா) said...

குறள் அழகு - குறளின் பொருள் ஆழம் அதனினும் அழகு - உரை - கவிதை நடையில் அழகினும் அழகு. கவிதை கை வந்த கலை- அதனால் எழுதுவது அத்தனையும் கவிதை ஆகிறது. நல் வாழ்த்துகள்.

Unknown said...

நன்றி சீனா, இதற்கு வரும் பாராட்டைத்தான் நான் பெரிதாய் நினைக்கிறேன்.

எளிமையாக இருப்பதாக என் புதுக்கவிதையைக் காண்பீர்கள். ஆனால் இதன் பின்னணியில் நிறைய உழைப்பு இருக்கிறது.

நான் கற்றுக்கொள்கிறேன் முதலில். பின் கற்றதை அலசுகிறேன். அலசியபின் ஒரு முடிவுக்கு வருகிறேன். வந்ததையே புதுக்கவிதையாய் எழுதுகிறேன்.

இதற்காக நான் புறட்டும் உரைகள் பல வேறுபட்ட அறிஞர்களுக்குச் சொந்தமானவை. பலரின் உரைகளையும் அலசி நான் என் விழியால் மெய்ப்பொருள் கண்டு எழுதுகிறேன்.

முதலில் இதற்காக என்னைச் சிலிர்க்க வைத்துப் பாராட்டியது அன்பு மாலன்தான். மாலனிடமிருந்து பாராட்டுப்பெறுவது எளிதல்ல.

நான் தமிலுகத்தின் (இணையகுழுமம்) ஆஸ்தான கவியாக அறிவிக்கப் பட்டபோது இதைத் தொடங்கினேன் என்று ஞாபகம்.

2002ல் தொடங்கியது இப்பணி, இன்னும் முடிவடையவில்லை. என் சோம்பேறித்தனம் என்று சொல்வதா அல்லது சுதந்திரமான என் விரல்கள் மொழியாக்கத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியாமல் மிரள்கின்றன என்று சொல்வதா அல்லது என் பணிச்சுமை 2003க்குப் பிறகு ஒப்பந்தப்பணி காரணமாகக் கொடுமை என்பதைச் சொல்வதா தெரியவில்லை.

எதுவானாலும், நான் செய்துமுடித்தே ஆகவேண்டும்.

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை மெல்ல மெல்லத்தான் வரும் என்றாலும் வந்துகொண்டே இருக்கும்.