வசீகரம் வாய்க்கரிசி


இந்தக் காலையே
தெளிந்ததாய் இருக்கட்டும்
கெட்ட கனவுகள்
தொலைந்ததாய் நொறுங்கட்டும்

எரியும் காயத்தைக்
காலமும் விழுங்கட்டும்
புத்திக் கவசங்கள்
நெஞ்சோடு நிலைக்கட்டும்

கிளைகளில் காற்றுக்கு
ஊஞ்சல் வேண்டும்
இலைகளில் மழைக்கு
முத்தம் வேண்டும்

யாருக்கு நீ வாழும்
வேர் வேண்டும்
வேர்காக்கும் சேற்றையே
மரம் வேண்டும்

மாயைகள் எப்போதும்
கண் சிமிட்டும்
மரணத்தின் கரமதில்
மறைந்திருக்கும்

வசீகரம் வேறென்ன
வாய்க்கரிசி
துணைக்கரம் ஒன்றுதான்
தாய்க்குருவி

2 comments:

cheena (சீனா) said...

//கிளைகளில் காற்றுக்கு
ஊஞ்சல் வேண்டும்
இலைகளில் மழைக்கு
முத்தம் வேண்டும்//

அருமையான சிந்தனையில் விளைந்த அடிகள்.

வாய்க்கரிசி போன்ற அமங்கலச் சொற்களை கவிஞன் தவிர்ப்பது நலம். உவமைகளிலும் உயர்ந்த உவமைகள் வேண்டும்.

உவமை என்பது உயர்ந்ததின் மாட்டே ! இது எழுதாத இலக்கணம். சிந்திக்கலாம்.

Unknown said...

அது ஒரு கொடுமையான மனோநிலை சீனா. அந்த மனோநிலையை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். சித்தர்களின் சினம்போல என்று எடுத்துக்கொள்ளுங்களேன் :)