நேர்கொண்ட பார்வை

சிலுசிலு துணியணிந்து
தொப்பலாய் மழையில் நனைந்து
இன்னும் கொஞ்சம்
கந்தக நெருப்பு மூட்டினால்

பாதித்தொடை
சாதிக்காது இனி என்ற
சாதுர்ய வணிகமறிந்து
இன்னும் கொஞ்சம்
விழிவெடிக்க உயர்த்தினால்

பின்னுக்கு வளையும்போது
முன்னுக்கு வரவேண்டும்
இன்னும் கொஞ்சம்
எடுப்பாக எல்லாம் துடிப்பாக

கண்களைச் செருக வேண்டும்
இன்னும் கொஞ்சம்
உணர்ச்சிக் கிளர்ச்சியோடு

இவைபோல் உண்டு இன்னும்
இவற்றால்தான் வெற்றி நிச்சயம்
திரையுலகில் நீயே
முதலிடத்தை முத்தமிடப்போகும்
புத்தம்புதுக் கதாநாயகி

அடப்பாவமே
பெண்களின் நிலை
இதுதானா என்று
அருவருப்பு தாளாமல்
பரிதாபம் கரைமீற

நெஞ்சு நிமிர்த்தி
பெண்ணியம் பேசி
முன்னேறும் பெண்களின்
கவிதைகளுக்குள் கர்வமாய்
மூச்சுவிடத் தாகம்கொண்டு
பக்கங்களைப் புரட்டினேன்

பெற்ற பிள்ளையிடமோ
பெற்றெடுத்த அன்னையிடமோ
உடன்பிறந்த உதிரத்திடமோ
உற்ற நட்பிடமோ
ஊர்க்கோடி நாலுபேரிடமோ
சொல்லக் கூசும் சொற்கள்

அந்தரங்க உறுப்புகளின்
அருவருப்புப் பெயர்களின்
அடாத அணிவகுப்புகள்
படுக்கைக் கசங்கல்களோடு
விசத் தூண்டில்
வீசும் வார்த்தைகள்

கவலை வந்தென்னைக்
கழற்றி எறிந்தது

இவர்களிடமிருந்து
இதய உணர்வுகளை
பெண்ணின மேன்மைகளை
முன்னேற்ற எண்ணங்களை
அற்புதமாய்ப் பதிவு செய்யும்
பலநூறு பெண் எழுத்தாளர்களை
எப்படிக் காப்பது?
உறவுதான்

பலமும் பலகீனமும்
உறவுதான்

உயிருக்குயிராய் நேசிக்கும்
ஜீவனை விழிகள் தேட
வாழ்க்கை கரைந்துவிடுகிறது
சிலருக்கு

உயிரையே வைத்திருக்கிறேனென்று
நிரூபிக்கத் தவிக்கும் தவிப்பில்
வாழ்க்கை தீர்ந்துவிடுகிறது
சிலருக்கு

கிழக்கை மேற்காக்கி
பின்னொருநாள்
அந்த மேற்கையே கிழக்காக்கி
வித்தை காட்டிக்கொண்டே
இருக்கிறது வாழ்க்கை
பலருக்கு

எப்படியானாலும்
தூக்கிச் சுமக்க
ஓடிவருவது மட்டும்
உன்னை விலக்க முடியாத
இன்னொரு உறவுதான்

பவள ஒளி தெறிக்கும் புன்னகையோடு

பூரண நம்பிக்கைப்
பொற் தேர் வீதியில்
புதுநிலவாய் உலாவரும்
பூரிப்புப் பொழுதுகளில்

உன் எதிர்பார்ப்பு
நெரிசல்களாலேயே
நொறுங்கிப்போய்விடாதே

காலத்தால் மூடிக்கிடக்கும்
வெற்றியை மறந்துவிடு

முயற்சிகளில் முழுதாய்
மூச்சைப் பிணைத்துவிடு

கதவுகள் தட்டப்படும்
களியூற்று லயத்தோடு

வாசலில் வந்து
காத்திருக்கும்
வெற்றி
தன்
பவளவொளி தெறிக்கும்
புன்னகையோடு

பிரியாவிடை

கிட்டத்தட்ட இதுதான் என் முதல் புதுக்கவிதை என்று சொல்லவேண்டும். இதை நான் புதுக்கவிதை எழுதுவதாய் நினைத்து எழுதவில்லை. ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடிக்கும்போது நண்பர்கள் எல்லோரும் ’ஆட்டோகிராப்’- நினைவுப்பதிவு கேட்டார்கள். என் மனம்போன போக்கில் சுருக்கமாக நான் எழுதிய நினைவுப் பதிவுதான் இது

பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்புவிழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
என் இனிய நண்பா