26

அடி பெண்ணே
உன்னை என் விழிகளால்
தொட்டுத் தொட்டு வாசித்தபோது
நீ அள்ளி இறைத்த நயாகராச் சாரல்
என் கண்களின் ஞாபகங்களில்
அப்படியே ஒட்டிக்கிடக்கிறது

அடடா
என்ன ஒரு நாணம்

மேப்பிள்மரத் தேன்
துளித் துளியாய்ச் சொட்டச் சொட்ட
உன் கன்னங்களில்
கனடாவின்
வடதுருவ ஒளிக்கதிர் வீச்சுகள்
வண்ணங்களை வாரியிறைக்க
என் கண் கடலுக்குள்
உன் காதலைச் செழுத்தியது
உன் நங்கூர நாணம்

என்னைக் கண்டு வெடித்த உன்
தோரண வெட்கமும்
பூரண ஆனந்தமும்
என்னைக் கிழித்தெடுத்து
உன் சந்தனக் கழுத்திலிருந்து
சறுக்கும் இடைக்குள்
நழுவி விழும் துப்பட்டாவாய்
ஆக்கிக்கொண்டன

போதாக்குறைக்கு
குழைந்து குழைந்து வழிந்தோடும்
உன் கொஞ்சு மல்லிக் குரல் வேறு

நான் கவிதை எழுதுகிறேன்
வெகு அக்கறையாய்

ஆனாலோ
காகிதங்கள்
காலியாகக் கிடக்கின்றன

ஏன்

என் கவிதையே
நீதான் அங்கே நிற்கிறாயே

ஒரு கவிதையிடம்
ஒரு கவிஞன்
உணர்வு மொழிப் பரப்பில்
உரையாடிக்கொண்டிருப்பதுதான்
எத்தனை எத்தனை அற்புதப் புல்லரிப்பு

கோடை வனக்
குற்றாலக் குளியலிலும்
கிட்டுமோ அந்த உச்சநிலைச் சிலிர்ப்பு

வண்ண வண்ண விளக்குகள்
லட்சம் பலகோடியாய்
உன் கண்களில் வரிசைகட்டி
விட்டுவிட்டு எரிந்ததைப் பார்த்து
அணைந்துதான் போனேன் முதலில்
பிறகோ எரிந்தே போனேனடி
என் கண்ணே

அன்றுமுதல்
கொஞ்சம் பைத்தியம்தான் நான்

அட
நாசூக்கு என்ன வேண்டியிருக்கிறது இதில்
முழுவதும் ஆனேனடி
உன் பைத்தியமாய் என் பெண்ணே

ம்ம்ம்...
இதையெல்லாம்
நானா எழுதுகிறேன்
எனக்குள் நுழைந்து ஏதோ செய்யும்
உன்னுடைய எதுவோ எழுதுகிறது

யாருடன்
உரையாடுகிறேன் இப்போது
இது கனவாய் இருக்குமோ
என்று நான் சுதாரித்தாலும்கூட
நகத்தின் நம்பமுடியா வேர்களுக்குள்ளும்
தித்தித்திப்பாய்த் தித்திக்கிறதடி

மனசு அலைபாய்வதை
மனசே அறிந்துகொள்கிறது
ஆனால் ஏன் என்றுதான்
அந்த மனசுக்கும் தெரியவில்லை

அட
நீதான் சொல்லேன்
சொன்னால்
உயிர் வாழ்வேன் தப்பிப் பிழைத்து
உன் சொற்காற்றைச் சுவாசித்து

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: