ஓர் ஊரில் ஒரு வெள்ளை உள்ள எலி

ஓர் ஊரில்
ஒரு வெள்ளை உள்ள எலி
.
சின்னஞ்சிறு பொந்து
உற்சாக உலகம்
.
நெல்லோடு
கடலையும் பருப்பும்
.
பொழுதுக்கும்
சிரிப்பும் விளையாட்டும்
.
ஓர் இருளில்
மொத்தமாய்க் களவுபோனது
நெல் கடலை பருப்பு
.
தவித்தது
தவமிருந்து துடித்தது
.
நாள்
வாரமானது
வாரம் வருடமானது
.
கறுத்துப் போனது
சிறுத்துப் போனது
.
செவிகள்
சிதைந்துவிட்டன
.
கண்கள்
விழுந்துவிட்டன
.
நாவின் தாகம்
உயிரில் ஓலம்
.
இன்னும் ஓர் இருளில்
தங்கத்தால் ஒரு பொறி
தகதகப்பாய் உள்ளே
தேங்காய்க் கீற்று
.
எத்தனை வாசம்
எத்தனை வசீகரம்
.
பசியே
பதார்த்தத்தின் ருசி
.
அச்சத்தால்
பொந்துக்குள் பொந்துசெய்து
புதைந்துகொண்டது எலி
.
உயிரைப் பிளந்து
தாக மையத்தில் புறட்டி எடுத்தது
தேங்காய்க் கீற்று
.
மதி
மயங்குவதில்லை
ஆனால்
பசியோ விடுவதில்லை
.
இன்றோடு பொறிக்குள்
இருபது வருடங்கள்
.
தேங்காய்க் கீற்று எங்கே
நெல்மணிகள் எங்கே
கடலையும் பருப்பும் எங்கே
.
கம்பிகளுக்கிடையில்
கடுங்கொடும் பட்டினியில்
ஏக்கத்தின் விசித்திர திசைகளில்
கிழிந்தழியும் எண்ணங்களில்...

1 comment: