22

அது ஒரு வனாந்தரம்

அழைத்துச் சென்ற
என் விரல் முடிச்சுகளை
அவிழ்த்துக்கொண்டு
திசைகள் திணர ஓடுகிறாய்

.....நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....

கண்களை விரித்து
சொற்களை அவிழ்த்து
இதழ்களில் உயிர் நிரப்பி
எல்லைகள் கனியப் பாடுகிறாய்

பசுமைக்குள் பசுமையாய்ப்
பச்சை விரித்துப் படருகிறாய்

.....பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று....

கோடி இலைகளும்
கூர் நுனிகளால்
உன்னைத் தீண்டத் தாவுகின்றன

செடிகளும் கொடிகளும்
இயற்கை வளைவுகளால்
உன்னை வளைக்கப் பார்க்கின்றன

மரங்களின் பட்டைகளும்
காதுகளாய் வெடித்து
உன் குரல் கேட்டுத் தவிக்கின்றன

பாடுகிறாய்
பசுமைக்குள் பசுமையாய்ப்
பச்சை விரித்துப் படருகிறாய்

....துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை.....

எகிறி விழுந்து
ஓடிச் சென்று
முத்தமிட்டு
நிறைவடையா தாகமாகி
உன்முன் ஆடுகிறது
உயிர்

.....நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்....

....நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்