இது
முறையா சொல்

இப்படித்
தட்டுத் தடுமாற
விட்டுவிட்டுச்
சட்டென
விடைபெறுவது
தேவ தேவதைகள் சாட்சியாக
சரியா சொல்

உனக்காக
ஏங்கிக் காத்திருந்த
நடுக்கப் பொழுதுகள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

உனக்காக
உறக்கம் துறந்துத் தவித்திருந்த
இரவுப் பொழுதுகள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

உன்
கதகதப்புச் சுகம்பெறக்
கடுந்தவக் கோலங்கள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

வந்தது
வந்ததாய் இல்லாமல்
மாயமாய்
மறைந்துபோகும் நிலை
துரோக இழிநிலையல்லவா
சொல்

பச்சைப்பசும் இலைகளும்
கண்ணீர் கேட்டுப்
பரிதவித்து உதிர்கின்றன
சினங்கொண்டு சிவக்கின்றன

இத்துயர் காணும் நெஞ்சின்றி
பறவைகளும் பரிதவித்து
நெடுவானம் பறக்கின்றன காண்

போதுமா போதுமா
கனடியக் கடுங்குளிரின்
கொடுந்துயரில் கிடந்துழலச்
சன்னமாய்ச் சபித்துவிட்டு

இப்படி நீ மட்டும் தப்பிப் பிழைத்து
விடைபெறுவது நியாயமா
சொல்

கோடையே கோடையே
கனடியப் பசும்பொன்னெழிற்
கோடையே

இப்படி நீ மட்டும் தப்பிப் பிழைத்து
விடைபெறுவது நியாயமா
சொல்

No comments: