ஏனென்றே அறியாமல்

ஏனென்றே அறியாமல்
விழிப்பு வந்து
உறங்காமல் கிடக்கும்
இரவுகள் எதைச் சொல்கின்றன?

ஓடு ஓடென்று பணிச்சுமையில்
ஓடித்திரியும் உனக்கு
உனக்கே உனக்காக நேரத்தை
நான் இப்போது தருகிறேன்

என்னில் படுத்துக்கொண்டு
என் மடியின் அமைதியில்
உன்னை நீ யோசி
என்று சொல்கின்றனவா?

திரும்பிப்பார்
உன் பயணத்தில் நீ
எங்குமே செல்லவில்லை

நின்ற இடத்திலேயே நிற்கிறாய்
இதற்கு ஏன் நீ ஓடவேண்டும்
என்று கேட்கின்றனவா?

எதுவும் யாருக்கும் புரிவதில்லை
அவரவர் அவரவரின்
அழிச்சாட்டியங்களைக்
கடைவிரிக்கத்தான் வருகிறாரேயன்றி
நல்லன கொள்வதற்காக
ஒருவருமே வருவதில்லை

இதில் கூடும் தளமென்ன
உரைக்கும் கருத்தென்ன
என்று புரியவைக்கின்றனவா?

பசிக்குமுன் புசிக்கிறாய்
காண்டாமிருகங்களை விழுங்கிவிட்டு
இரவின் அமைதிப் படுக்கைக்குள் நுழைகிறாய்
பட்டினியாய் வயிற்றுக்கு
ஒருநாளும் ஓய்வு தருவதில்லை

சட்டென ஒருநாள் விழுந்துவிடப் போகிறாய்
எச்சரிக்கத்தான் எழுப்பிவிட்டேன்
என்று சொல்கின்றவா?

எழுந்ததும்
மீண்டும் கண்ணிறுக்கி முயன்று உறங்காமல்
ஏன் இப்படி நடு இரவிலும் உன் எண்ணங்கள்
தறிகெட்டு ஓடுகின்றன என்ற
விமரிசனமும் கரிசனமுமாய்
என்னுடம் உறங்கத் தவிக்கின்றனவா?

No comments: