கருசமணி - கருகமணி - தாலி
தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும் தாலியை கருசமணி அல்லது கருகமணி என்றுதான் சொல்வார்கள், தாலி என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இன்றெல்லாம் முஸ்லிம்பெண்கள் கருசமணி அணிவதில்லை.
இந்துக்களுக்கு இருப்பதைப்போல முஸ்லிம் பெண்களுக்குத் திருமணத்தின்போது கருசமணி கட்டுவது என்பது மதக்கட்டாயம் அல்ல.
இது மாற்றுமதக் கலாச்சாரம் என்பதால் கட்டுவது கூடாது என்று சொல்லும் வகாபியம் ஒரு புறமும், கட்டுவது கட்டாயம் இல்லை, கட்டினால் பிழையும் இல்லை, ஏனெனில் இது மதச்சடங்காய் முஸ்லிம் பெண்களுக்குக் கட்டப்படுவதில்லை உலக வழக்காகக் கட்டப்படுகிறது திருமணமான பெண் என்ற அடையாளமாகக் கட்டப்படுகிறது என்று சொல்லும் மிதவாதம் இன்னொருபுறமும் உண்டு.
ஆனாலும் இன்றெல்லாம் இந்துப் பெண்களே தாலியைத் துறந்துவிட்டார்கள், அல்லது முன்புபோல முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் சாலினி தாலியைக் கழற்றி காலண்டரோடு மாட்டிவிட்டு உறங்கச் செல்வார்.
நான் திருமணம் ஆன புதிது. மனைவிக்கு ஒரு எக்ஸ்ரே எடுக்க வேண்டிய தேவை வந்தது. நான் என் மனைவி மற்றும் கடைசித் தம்பியோடு மருத்துவ ஆய்வு நிலையத்துக்குச் சென்றேன்.
எக்ஸ்ரேக்குமுன் என் மனைவியிடம் கருசமணியைக் கழற்றிவிடக் கூறி இருக்கிறாள் நர்ஸ். அவ்வளவுதான், கண்களில் பதட்டம் நிலவ என் தம்பியை அழைத்து இதைக் கழற்றி கணவரிடம் கொடுக்கக்கூடாது, நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், முடிந்ததும் நான் பெற்றுக்கொள்கிறேன் என்று கண்களில் நீர் நிறைந்த நிலையில் கூறி இருக்கிறார். இதை அறிந்த எனக்குப் பெருமையாய் இருந்தது.
என் மனைவி ஒரு நல்ல தமிழ்ப்பெண். இப்படித்தான், தமிழ்நாட்டு முஸ்லிம் பெண்கள் அனைவரும் மிக நல்ல தமிழ்ப்பெண்கள் என்றே நான் இதுவரை கண்டிருக்கிறேன். அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு அனைத்தையும் வள்ளுவன் தங்களுக்கே சொன்னதுபோல பொது இடங்களில் நடந்துகொள்வார்கள்.
இன்றெல்லாம் என் மனைவியின் கழுத்தில் கருசமணி என்று ஏதும் கிடையாது. அது பிறமதம் சார்ந்தது என்று அவர் எப்போதோ கழற்றிவிட்டார். அணிந்தால் பிழையில்லை என்பது என் கருத்து என்றாலும் எனக்கும் அதில் பெரும் நாட்டம் கிடையாது.
அதோடு கணவன் தாலிகட்டிக்கொள்ளாத போது மனைவியின் கழுத்தில் மட்டும் ஏன் இந்த அடையாளக் கயிறு என்ற பெண்ணுரிமை எண்ணமும் எனக்கு உண்டு. ஆனாலும் ஊரில் தமிழ் முஸ்லிம் பெண்கள் பலரும் இன்றும் கருசமணி அணிந்துகொண்டுதான் இருக்கிறார்கள், குறிப்பாக முதியவர்கள்.

கல்யாணமாம் கல்யாணம்


தமிழ்முஸ்லிம் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறீர்களா? நண்பராய் இருந்து நடப்புகளைக் கேட்டிருக்கிறீர்களா?

*

ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
      முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
      தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
      ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
      உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
      பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
      நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
      அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
      முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார் 
      நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
      பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
      அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
      பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
      இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
      ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
      மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
      மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
      அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
      புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
      வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
      இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
      மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
      குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
      சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
      செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
      வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
      உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
       உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
       எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
      கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
      பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
      சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
      மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
     எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
     நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
     சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
      ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
      முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
      தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
      சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
      வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
      முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
      சிரிப்பாளே பெண்ணின்தாய்
‪#‎தமிழ்முஸ்லிம்‬ கைலி - கையலி - லுங்கி - சாரம் நான் அறிந்து கைலி கட்டாத ஒரு தமிழ் முஸ்லிம் கிடையவே கிடையாது. அவன் கட்டிக் கட்டிதான் தமிழ்நாடே கட்டத் தொடங்கியது என்றும் சொல்வேன். கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கதர் வேட்டிக்குச் சமமாய் ஆனது. ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியும் ஒரு கருத்து உண்டு. ”ஈரோட்டுச் சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்” என்று அண்ணாவின் படம் ஒன்றில் ஒரு பாட்டுவரி வரும். ஈடோடுதான் இப்படியான கைலிகளுக்கும் சிறப்பு வாய்ந்தது. இணையத்தில் கைலி பற்றி அருமையான தகவல்கள் தமிழிலேயே கிடைத்தன. 'லூஜீ' என்ற பர்மியச் சொற்களுக்குச் சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள், 'லூஜீ'யே மருவி லுங்கி ஆனது. கண்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்பது ஆப்ரிக்கர்கள் உபயோகிக்கும் ஒரு உடம்பை மறைக்கும் துணி, இதனால் நாட்போக்கில் அது கைலி ஆகி இருக்கலாம். லுங்கியை இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பர்மா, ப்ருனெய், மலேசியா, நேபால், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆப்ரிக்காவில் என்று பல பல நாடுகள் அணிகின்றனர். இந்த லுங்கி / கைலியின் ஆரம்பம் என்பது என்ன தெரியுமா ?! சரோங் (Sarong)....... இது இன்று உலகம் முழுவதும் தெரிந்த கைலியின் ஆரம்ப பெயர் எனலாம். இதை ஆண்களும், பெண்களும் கட்டலாம். ஒரு அமெரிக்க கடற்கரையில் சென்று பார்த்தால் பெண்கள் இந்த சரோங்கை வண்ண நிறங்களில் கட்டி இருப்பதை பார்க்கலாம், அவ்வளவு ஏன், கோவா சென்று பார்த்தால் ஆண்கள் சிலர் இந்த சரோங்கை கட்டிக்கொண்டு செல்வதை பார்க்கலாம், கைலி இப்படி பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு தமிழ் முஸ்லிமுக்கு அது தேசிய வீட்டு உடை. அதையே வெள்ளையில் கொண்டுவந்து கல்லூரியிலும் கட்டும் உடையாக மாற்றிக்கொண்டுவிட்டனர். என் அம்மா பிறந்த ஊரான அதிராம்பட்டிணம் சென்றால், அங்கே ஆயிரம் பல்லாயிரம் வெள்ளைக் கொக்குகள் நிற்பதாகவும் பறப்பதாகவும் தெரியும். ஆமாம் அவர்களின் கொரவமான உடை என்பது வெள்ளைக் கைலியும் வெள்ளை சட்டையும் உடுத்துவதுதான். என் அம்மா பெரும்பாலும் பத்தை(batik) கைலியும் அதற்கேற்ற தாவணியும்தான் அணிவார்கள். அந்த கைலி பல வண்ணங்களில் வெகு அழகாக இருக்கும். அவை மலேசியாவிலிருந்தும் இந்தோநேசியாவிலிருந்தும்தான் பெரும்பாலும் வரும். சிங்கப்பூரிலிருந்து ஊர்வரும் தமிழ்முஸ்லிம் ஒவ்வொருவரின் பெட்டியிலும் வெகு நிச்சயமாக பெண்கள் அணியும் இந்த வகை வண்ணக் கைலிகள் இருக்கும். எனக்கெல்லாம் வெள்ளைக்காரணின் பேண்ட் சட்டையோடு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், கவ்விப் பிடித்திருக்கும் அந்தக் கடைசிக் கவசத்தையும் கழற்றி எறிந்துவிட்டு கைலிக்குள் மாறினால்தான் மூச்சே வரும். சுதந்திரம் கிடைத்த நிறைவு நெஞ்சில் ஏறும். * நான் கைலி கட்டி இருக்கும் புகைப்படம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். இதோ ஒன்று. டொராண்டோ செண்ட்ரல் ஐலாண்டில் கட்டிக்கொண்டு நின்றது ;-) https://www.facebook.com/photo.php?fbid=907678302590677&set=a.534332339925277.129828.100000455463856&type=3&theater
சொத்தின் பற்றில் 
உறவுகளை 
அறுத்துக்கொள்வதைவிட

உறவின் பற்றில்
சொத்துக்களை 
அறுத்துக்கொள்வது
எவ்வளவோ மேல்

அன்புடன் புகாரி
20160226
#தமிழ்முஸ்லிம்

திரு அப்துல்காதர் vs ஜனாப் அப்துல்காதர்

தமிழ்நாட்டில் சில முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிம் நபரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உ-ம் ஜனாப் அப்துல் காதர் அவர்களே. இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.

ஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.

துவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.

மிஸ்டர் என்ற சொல்லே மாஸ்டர் என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததுதான். மிஸ்டர் என்பதையும் மாஸ்டர் என்பதையும் மாற்றிப் பயன்படுத்தத் தொடங்கியதே பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானாம்.

மாஸ்டர் என்ற சொல்லின் மூலத்தைப் பார்த்தால் அது லத்தீன் மொழியில் மாஜிஸ்டர், மாஜிஸ்ட்ரம் என்ற சொற்களின் மூலச் சொல்லான மாகுஸ் அதாவது ”க்ரேட்” என்ற பொருளுடைய சொல்லிலிருந்து வந்திருக்கிறது. அதாவது ”க்ரேட் மேன்” உயர்ந்த மனிதர் என்று அழைப்பதாகத்தான் மிஸ்டர் என்பது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. கிரேக்க மொழியில் மெகாலொ என்ற சொல்லின் மூலமான மெக் என்ற சொல்லும் ‘க்ரேட்’ என்ற பொருளுடையதுதான். இளையராஜாவை மேஸ்ட்ரோ என்று அழைக்கிறார்களே அதுவும் இந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்ததுதான்.

”சார்” என்று அழைப்பதற்குப் பதிலாகவும் இந்த மிஸ்டர் என்ற சொல் பயன்படும். ராணுவத்தில் இந்த மிஸ்டரின் பயன்பாடு வெகு அதிகம்.

ஆடவரை மரியாதையாக அழைக்கும் இந்தச் சொல்லின் வழக்கம் அப்படியே தமிழுக்குள் வந்தது. தமிழர்கள் பெயருக்கு முன் திரு என்று இட்டு மரியாதையாக எவரையும் அழைப்பார்கள். உ-ம் திரு மாலன்.

இந்தத் திரு என்ற சொல்லை மதம் சார்ந்த ஆன்மிகவாதிகள் புனிதமான, தெய்வீகமான என்ற சொற்களுக்கு இணையாகப் பார்க்கிறார்கள். திரு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. ஆனால் பொதுப் பயன்பாட்டின்படி திரு என்று பெயரின் முன் இட்டு எவரையும் அழைக்கும்போது அது மரியாதைக்குரிய என்று மட்டும்தான் பொருள்படும்.

அதாவது மிஸ்டர் என்றாலும் திரு என்றாலும் ஒரே பொருள்தான். ஒருவரைக் குறிப்பிடும்போது அல்லது அழைக்கும்போது இந்த திரு என்ற சொல் மொழி சார்ந்த சொல்லே தவிர மதம் சார்ந்த சொல் அல்ல. ஆகவே திரு என்ற சொல்லை தமிழர்கள் அனைவரும் மதம்கடந்து பயன்படுத்தலாம்.

தமிழக முஸ்லிம்கள் திரு என்ற சொல்லை ஒருவரின் பெயருக்குமுன் இட்டு பயன்படுத்தினால் ஏதேனும் பிழையாகக்கூடும் என்று நினைத்து ஜனாப் என்று பயன்படுத்தினர். ஜனாப் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்று தேடிப்பார்த்தேன். இது அரபு மொழி வழக்கமாக இருக்கும் என்றுதான் நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். நான் சவுதி அரேபியா சென்று அங்கே அவர்களோடு உரையாடியபின்தான் புரிந்துகொண்டேன் அராபியர்களுக்கு ஜனாப் என்றால் என்னவென்றே தெரியாது என்ற உண்மையை.

முகம்மது நபி அவர்கள் ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவரையும் யாரும் ஜனாப் என்று அழைத்ததும் இல்லை. பிறகு எங்கிருந்து இந்தச் சொல் வந்திருக்க முடியும் என்று தேடினேன். பார்சி மொழியில் ஜனாப் என்றால் உயர்வான என்று பொருள். பார்சிக்காரர்கள் இச்சொல்லை பரப்பி இருக்கக் கூடும் அல்லது அவர்களிடமிருந்து தமிழ் முஸ்லிம்கள் பெற்றிருக்கக் கூடும்.

தமிழ் முஸ்லிம்கள் ஒன்று அரபிச் சொல்லைப் பயன்படுத்தலாம் அல்லது நேரே நம் தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு ஏன் பார்சி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

சவுதி அரேபியாவில் ஜனாப் என்பது அல்-கசீம் என்ற மாநிலத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர். அதைப்போய் தமிழ் முஸ்லிம்களின் பெயர்களுக்கு முன் இட்டு அழைப்பது ஏற்புடையதா என்று சிந்திக்க வேண்டும்.

இதில் சிலர் பெண்களை ஜனாப் என்ற சொல்லுக்கு பெண்பாலாக ஜனாபா என்ற சொல்லைக் கொண்டு அழைத்துவிடுகிறார்கள். ஜனாபா என்றால் அசுத்த நிலை என்று பொருள். காம உணர்வின் காரணமாக அசுத்தமாகிவிடுதலையே இது குறிக்கிறது. ஜனாபாவாக இருப்பவர்கள் தொழுகைக்கு முன் குளித்துவிட வேண்டியது இஸ்லாத்தில் கடமை.

அராபியர்களின் மரியாதைக்குரிய வழக்கம்தான் என்ன? சேக் என்று அழைப்பதுதான் அவர்களின் வழக்கம். வயதில் மூத்தவர்களையும் கற்றறிந்தவர்களையும் உயர் பதவி வகிப்பவர்களையும் மரியாதையாக அவர்கள் சேக் என்றே அழைக்கிறார்கள்.

பிறகு தமிழ் முஸ்லிம்கள் எப்படித்தான் மரியாதையாக இன்னொரு தமிழ் முஸ்லிமை அழைப்பது? இது நியாயமான கேள்விதான். இதற்கான விடையைத் தேடி நாம் வெகுதூரம் செல்லவேண்டியதில்லை. நமக்கு மிக மிக அருகிலேயே இருக்கிறது.

குர்-ஆனை தமிழ் முஸ்லிம்கள் எப்படி அழைக்கிறார்கள்?  திருக்குர்-ஆன் என்றுதானே? திருமறை என்றுதானே? அப்படி இருக்க திரு அப்துல் காதர் என்று அழைத்தால் அதைவிட தமிழ் முஸ்லிம் சகோதரர்களை மரியாதையாக அழைப்பதற்கு ஏற்ற சொல் வேறு எதுவாக இருக்க முடியும்?
#தமிழ்முஸ்லிம்

குழம்பு - ஆணம் - சால்னா

தஞ்சாவூர் முஸ்லிம் வீடுகள் பலவற்றிலும் குழம்பு என்று சொல்லமாட்டார்கள். ஆணம் என்றுதான் சொல்வார்கள்.


பருப்பாணம் - சாம்பார்

புளியாணம் - ரசம்

மீனாணம் - மீன் குழம்பு

கறியாணம் - கறிக்குழம்பு


ஆணம் என்பது பழந்தமிழ்ச் சொல். தமிழ் முஸ்லிம் வீடுகளில் இப்படியான பல பழந்தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.


குழம்பு என்பது பெரும்பாலும் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மூலிகைகளை அறைத்துக் கலக்கிக் குழம்பாக்கி புண்களில் இடுவார்கள்.


அகத்தியர்குழம்பு என்றால் ஒருவகை பேதிமருந்து. இளநீர்க்குழம்பு என்றால் இளநீரால் செய்யப்படும் கண்மருந்து. இப்படியாய் ஏகப்பட்ட குழம்புகள் தமிழ் மருத்துவத்தில் உண்டு.


மட்டுமல்லாமல் குழம்பு என்பதற்கு குழம்பிப்போதல் பைத்தியமாதல் என்ற பொருளே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. குழம்பிவிட்டான். குட்டையைக் குழப்பாதே. குழப்பக்காரன்.


ஆணம் என்றால் என்னடா என்று ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த நண்பன் கேட்டான். நீ குழம்பாதே அது குழம்பு என்று சொன்னேன் wink emoticon


சால்னா என்று உருது நண்பர்களைக் கொண்ட சில முஸ்லிம்கள் ஆணத்தைக் கூறுவார்கள்.


இந்த ஆணம் என்ற சொல்லைவிட பசியாறு, பசியாறிட்டு, பசியாத்தல், பசியாத்தலை என்ற பழக்கம்தான் வெகு சிறப்பு.


காலை உணவை வெள்ளைக்காரன் Break Fast என்பான். நீண்ட நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு உண்ணும் காலை உணவுக்கு அதுதான் சரியான பெயர்.


ஆனால் நாம் காலை சாப்பாடு சாப்பிட்டாச்சா? மதிய உணவு முடிச்சாச்சா, இரவு சாப்பாடு சாப்பிட்டாச்சா என்றுதான் கேட்கிறோம்.


காலை உணவுக்கு பசியாறல் என்பதுதான் சரி. காலப் பசியாறல முடிச்சுட்டு போங்கம்மா என்று முஸ்லிம்வீடுகளின் அன்பாகச் சொல்வார்கள்.


இதுபோல் முஸ்லிம் வீடுகளில் புழக்கத்தில் உள்ள சொற்களைத் தொகுக்க எனக்கு ஆசை. உங்களிடம் உள்ள சொற்களைப் பகிருங்களேன்!

மணத்தைத் தழுவும்போது
வரும் நட்பு என்பது
மலரையே தழுவும்போது
காதலாகிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
#தமிழ்முஸ்லிம்

ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?

இஸ்லாம் சகோதரத் துவத்தைப் போற்றும் ஒரு மார்க்கம்.

எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.

அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.

இதில் பாய் எங்கிருந்து வந்தது?

ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.

விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.

என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும்?
’பாய்’ ’பாய்’ என்றா?

இல்லை.

அது தவறாக அழைப்பு.

சரியான அழைப்பு ”சகோ” என்று  இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.

அல்லது அண்ணா தம்பி என்று அழைக்க வேண்டும்.

பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?

இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.

உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.

பாய் என்று ஒரு தமிழ் முஸ்லிம் அழைக்கத் தேவையில்லை. அப்படி அழைத்தால் அது அவனைத் தமிழைவிட்டு சற்று தூரத்தில் நிறுத்துகிறது.

தமிழ் வட்டத்தில் தமிழ் நாட்டில் சகோ என்று அழைப்பதே சரி.

தமிழரல்லாத இடங்களில் Bro என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். அல்லது சகோ என்றே அழைக்கலாம். காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.

அரபு மண்ணில் அஹூ என்று அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோ என்று பொருள்.

இனியாவது இந்த பாய் பாய் என்னும் நோயை விட்டுவிடுங்கள். அதைக் கேட்கும்போது தமிழ்க் காதுகள் சற்றே நெளிகின்றன?

இதில் பாயம்மா என்று அழைப்பது இதனினும் கொடுமை. பாயின் மனைவி பாயம்மாவாம்! மனிதர்கள் எப்படி பிழையாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

பாயம்மா என்றால் சகோதரி என்ற பொருளா அல்லது சகோதரனின் தாய் என்ற பொருளா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம், அதை விட்டொழிப்போம்.

#தமிழ்முஸ்லிம்

அப்பா vs அத்தா / அத்தா என்பதே பழந்தமிழ்ச் சொல்

அத்தா என்பதே பழந்தமிழ்ச் சொல்

தமிழக முஸ்லிம் வீடுகளில் தந்தையை அப்பா என்று அழைக்க மாட்டார்கள். அத்தா என்று அழைப்பார்கள்.

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது.

அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.
 
அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.

அத்தா என்பதுதான் பழந்தமிழ்ச் சொல். அப்பா என்பது தமிழுக்குள் சமீபத்தில் வந்த சொல்தான்.


*
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே. - தேவாரம்


*
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் - கம்பராமாயணம்.


*
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே - தேவாரம்


*
காமரு நோக்கினை அத்தத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிது - கலித்தொகை


*
'அன்னை நீ; அத்தன் நீயே;
அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே;
பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, "நீ இகழ்ந்தது" என்றது எங்ஙனே?
ஈசன் ஆய உன்னை நீ உணராய்!
நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?' 
- கம்பராமாயணம், யுத்தகாண்டம்


*
“முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
‘அத்தன்’ ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
-திருவெம்பாவை

#தமிழ்முஸ்லிம்

முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்?

நான் பிறந்த ஊர் ஒரத்தநாடு. அது தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது.

தஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் ”இடையில்” ஒரத்தநாடு ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிறது.

எனக்கு அப்போது வயது ஒரு 17 இருக்கும். என் அக்கா வீட்டிற்கு அருகில் ஒரு மாதா கோவில் இருக்கிறது. அதை மடம் என்று சொல்வார்கள்.

அங்கே நிறைய அனாதைக் குழந்தைகள் படிக்கிறார்கள். எல்லாம் இலவசம். அந்தச் சேவையை நினைத்தமாத்திரம் என் நெஞ்சம் நெகிழும்.

அனாதைகளை ஆதரிக்கும் எவரையும் எனக்குப் பிடிக்கும் கூடவே அவர்களுக்குக் கல்வி வழங்கினால் எத்தனை கருணை மனம் அது. போற்ற வார்த்தைகள் இல்லை.

மடத்தின் நிர்வாகியை அம்மாங்க என்றும் மற்ற மடத்துக் கன்னிகளை சிஸ்டர் என்றும் அங்கே அழைப்பார்கள். இந்த சிஸ்டர் என்பதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு விசயமாக அம்மாங்கவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அன்போடு விசாரித்த அவர், பீவி எங்கே வரவில்லையா என்றார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. அவர்கள் பீவி என்று மரியாதையாகச் சொன்னது என் மூத்த சகோதரியை. என் சகோதரிமீது அவர்களுக்கு மரியாதை அதிகம்.

எனக்குக் குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது. என் சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் ஆனது.

ஏன் சிரிக்கிறீர்கள் என்று அம்மாங்க கேட்டார்.

Mother என்று ஆங்கிலத்தில் சொல்வதை அம்மா - அம்மாங்க என்று தமிழ்ப்படுத்திச் சொன்னால் அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது.

தமிழுக்குச் சம்மந்தமே இல்லாத பீவீ என்ற சொல்லை என் சகோதரிக்குப் பயன்படுத்துவது எப்படி சரி?

கல்லாதவர்கள் எதையோ சொல்லலாம் கற்றவரான, ஒரு மடத்தின் நிர்வாகியான நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று கேட்டேன்.

சற்றே சங்கடப்பட்டார் ஆனால் தான் சொல்வது சரிதானே என்ற ஐய உறுதியோடு என்னிடம் விளக்கம் கேட்டார்.

பீவீ என்பது பீபீ என்ற சொல் மருவி வந்தது.

Bibi என்றால் உருதுவில் Miss அதாவது செல்வி என்று பொருள்.

பீபீ ஜெயலலிதா அல்லது ஜெயலலிதா பீவி என்றால் பொருள் சரி. ஆனால் அப்படியா அழைக்கிறோம்? ஏன் அப்படி அழைப்பதில்லை? எவரேனும் விடை சொல்வார்களா?

ஏனெனில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் பெண்மணி இல்லை. அவ்வளவுதான் ;-)

உருது, ஆப்கானிஸ்தான் மற்றும் சில பகுதியினர் பீபீ என்று மணமான பெண்களையும் கன்னியமாய் அழைத்தார்கள்.

பீபீ என்றால் மனைவி என்ற பொருளிலும் பயன்படுத்துவார்கள். உங்க பீவீ யாரு என்றால் உங்கள் மனைவி யார் என்று பொருள்.

பீபீ என்பது உருது.

ஒரு தமிழ்ப் பெண்ணை சகோ (சகோதரி) என்றுதானே அழைக்க வேண்டும்? அல்லது திருமதி என்று மணமான பெண்களையும் செல்வி என்று மணமாகாத பெண்களையும் தமிழ் வழக்கப்படியல்லவா அழைக்க வேண்டும்?

இந்த பீபீ, பீவீ எல்லாவற்றையும் உருது மற்றும் ஆப்கானிஸ்தான் காரர்களிடமே விட்டுவிடுங்கள். தமிழர்களாகிய நமக்கு அது தேவை இல்லை. அது நம்மைத் தாய்மொழி அறியாதவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டுவிடும்.

ஓர் முஸ்லிமிற்கு தாய், தாய்மொழி, தாய்மண் என்பனவெல்லாம் மிக அவசியம்.

இஸ்லாமிய வேத நூலை எவரும் அவரவர் தாய் மொழியிலேயே பயிலலாம். ஆர்வம் இருந்தால் தாராளமாக குர்-ஆனின் மொழியை அரைகுறையாய் அல்லாமல் ஆழமாகக் கற்றும் பயிலலாம்.

குரானின் மொழி அந்தக் கால அரபுமொழி. அதன் சொற்களுக்கு இந்தக்கால அரபிகள் சிலருக்கே பொருள் தெரிவதில்லை.

சங்ககாலத் தமிழைப்போல குர்-ஆனின் மொழி கலப்படமற்றத் தூய்மையானது.

முதலில் தமிழ்நாட்டின் முஸ்லிம்கள் சரியாகப் புரிந்துகொண்டால்தான் தவறாகச் சொல்லும் மற்ற மதத்தினருக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

* சிலர் முஸ்லிம் பெண்களை பேகம் என்றும் அழைப்பார்கள்.

பேகம் என்பது துருக்கி, பெர்சியன் மற்றும் உருது மொழியில் பயன்பாட்டில் உள்ள சொல்.

பேகம் என்பது உயர் அதிகாரியைக் குறிக்கும். அதோடு நின்றுவிடாமல் உயர் அதிகாரிகளின் மனைவி, மகள் ஆகியோரையும் குறிக்கும்.

அதாவது மரியாதைக்குரிய சொல். ஆங்கிலத்தில் ஹானரபிள் என்பார்கள் தமிழில் உயர்திரு என்பார்கள். அப்படியான ஒரு சொல்.

ஆனால் வழக்கம்போல தென்னாசிய மக்கள் பேகம் என்பதை உயர்வடைந்த முஸ்லிம் பெண்களை அழைக்கப் பயன்படுத்தினார்கள்.

பேகம் என்றால் அரசி என்ற பொருள்படப் பயன்படுத்துகிறார்கள்.

பிறகு மெல்ல மெல்ல பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் செல்லமாக அல்லது பெருமையாக தங்கள் தங்கள் மனைவிகளையே ’எங்கூட்டு பேகம்’ என்பதுபோல் அழைக்கத் தொடங்கினார்கள்.

* அடுத்தது இந்த ’பானு’.

பானு என்ற பெயர் முஸ்லிம் பெண்களுக்குப் பரவலாக வழங்கப்படுகிறது.

பானு என்பதும் இதே வகையில்தான் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெர்சியன் என்றாலும் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி, இந்தியா மற்றும் நேபாளம் ஆகியநாடுகளில் வழக்கில் இருக்கும் பெயர் இது.

பீவி பேகம் என்பதெல்லாம் ஒரு மரியாதைச் சொல்போல பயன்பட்டாலும், பானு என்பது ஒரு பெயராகவே பயன்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பொருளில் புழங்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர் பானு என்பதை சின்ன சகோதரி என்ற பொருள்படப் பயன்படுத்துகிறார்கள்.
பானு இங்க வாம்மா என்றால், தங்கச்சி இங்க வாம்மா என்று பொருள். பானுவைக் கட்டிக்கொண்டவர்களுக்கு பானு மனைவியாகிறாளே என்று கேள்வி கேட்டால் பதில் என்னிடம் இல்லை. எங்கிருந்தோ வந்த சொல்லைப் பயன்படுத்தும்போது நாம் பொருள் பார்த்து பயன்படுத்துவதில்லை. அதனால் வரும் குழப்பங்கள் நியாயமானவை தானே?

ஆனால் பெண்ணே, இளவரசியே, மணமகளே என்றுதான் ஈரானில் பயன்படுத்துகிறார்கள். ஏன்? ஏனெனில் பார்சி அவர்கள் மொழி ;-) அதனால் அவர்களுக்குத் தெரியும் பானு என்ற சொல்லின் பொருள்.

இதில் மிகச் சரியான பானு என்பதை பெயராக மட்டுமே பயன்படுத்துவோர் துருக்கிக்காரர்கள்தாம். அதுதான் பானு என்ற சொல்லின் சரியான பார்சிய மொழிப் பயன்பாடு.

ஆகவே சகோக்களே பானு என்பது ஒரு பெயர்.

தமிழ்நாட்டில் பானு என்ற பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்தவர்கள் பானுவுக்கு தங்கச்சி என்ற பொருளோ என்று கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், பார்சியில் அது வெறுமனே ஒரு பெயர். உயர்வான பெண் என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.

கூடுதலாக ஓர் ஆறுதல் என்னவென்றால், தெலுங்கு மொழியில் பானுவுக்கு ஓர் அருமையான பொருள் உண்டு. அதை நினைத்து சந்தோசப்பட்டுக்கொள்ளவும் செய்யலாம். பானு என்றால் தெலுங்கில் ”சூரியக்கதிர்கள்”

சாய்ரா பானு இப்ப நிமிர்றா பார்த்தீங்களா ;-)






















பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிதா

குட்டியம்மா குட்டியம்மா
            என் செல்லக் குட்டியம்மா
கட்டியம்மா கட்டியம்மா
            என் தங்கக் கட்டியம்மா
சுட்டியம்மா சுட்டியம்மா
            என் பவளச் சுட்டியம்மா
பொட்டியம்மா பொட்டியம்மா
            என் வைரப் பொட்டியம்மா
* * * * *

நேற்றைத் துடைத்து
நெருப்பில் இடுக

நேற்றின் படிகளை
நெற்றியில் கொள்க

இன்றை எடுத்து
நாளைகளைக் கட்டுக

கட்டும்போதே
கட்டற்று வாழ்க

அன்புடன் புகாரி
20160221

* * *

உடலறிவாய் மனமே

சொல்லவந்தேன் நான்
எனதேற்றங்களின் இமயத்தையென்று
துள்ளிக்குதித்தது மனம்

நாவில்லாமல் சொல்லா
விழியில்லாமல் பார்வையா
நானில்லாமல் சொல்வதா
மிதக்காதே மனமே என்றது உடல்

என்ன முடியும் உன்னால்
என்னைப்போல்
எண்ண முடியுமா கறியே
என்று தீ திரட்டியது மனம்

உயிர் குறுக்கிட்டு
ஒரு நொடி பொறுப்போமே

சிந்தனை எரித்துச்
சொற்களாய்க் கோத்தெடுத்து
ஓடிவருகிறான் ஒரு கவிஞன்

உற்றுக்கேட்போமே
அவனை என்றது

வாயைக் கழற்றி
வாயில்வழி வீசிவிட்டு
செவியைத் துடைத்து
செறுகிக்கொண்டது சர்ச்சை

கவிஞன் துவங்கினான்
கவிதை சுழன்றது

-o0o-

உடலே உன் முதல் துணை
இறுதிவரை உன்னுடன் வரும்
ஒற்றைத் துணையும் உடலேதான்

அதன் தேவை நிறைவேற்றத்
தவமிருக்கும் சேவகனே மனம்

விருப்பங்களின் ஊற்றும்
வெறுப்புகளின் நாற்றும்
ரசனைகளின் வேரும்
பாசத்தின் கருவும் உடல்

நஞ்சு உடலேறினால்
உனக்குத்தான் நாசம்

மனதிலேற
ஊருக்கே நாசம்

ஆணுக்கும் பெண்ணுக்கும்
இளமைக்கும் முதுமைக்கும்
உடல் மாற்றமே மனமாற்றம்

எதையும் காணாக் குருடருக்கும்
மனதை உருவாக்குவது உடல்

உணவு உடை உறைவிடம் மட்டுமல்ல
உயிர்கூட உடலின் அவசியம்

சந்ததி விரிவதும் உலகம் துளிர்ப்பதும்
உடலின் அதிசயம்

உடல் ரேகைகள்
உன் தனியடையாளங்கள்

உடலே உன் தெளிவான முகவரி
மனமுகவரியோ உனக்குமே புதிர்

மனக்குயில் தங்கும் கூடு
உடலில்லையேல் ஏது வீடு

தாய் பிள்ளை உறவும்
தாம்பத்ய உறவும் உடல்

உள்ளத்தில் சுமப்பது சரியும் உறவு
உடலில் சுமப்பதே சாசுவத சிசு

மனம் அழிந்தால்
உடலும் உயிரும் வாழும்
உடல் அழிந்தால்...

மனம் செத்தவன்
ஓடுகிறான் உடல் மாய்க்க
உடலழியாது உயிர்பிரியாதென்ற
உண்மையறிந்ததனால்

உடலை வளைப்பது
மனதுக்குக் கடினமான காரியம்
மனதை வளைப்பதோ
உடலுக்குச் சொடுக்கும் செயல்

மனம் சொல்வதை
உடல் ஓரளவே கேட்கும்
ஆனால் உடல் சொல்வதை
மனம் கேட்டே ஆகவேண்டும்

உண்பதைத் தள்ளிப்போடும் மனதால்
உட்தள்ளிய உணவைச்
செரிக்காமல் நிறுத்தமுடியுமா

உடம்பின் தேவைகளை
மனம் தள்ளிப் போட்டாலும்
துளித்துளியாய் உயிரிழக்காமல்
தவிர்த்துப் போடமுடியுமா

மனம் பறக்கச் சொன்னால்
உடல் பறந்துவிடுமா

உடல்
உறங்கச் சொல்லிக் கேட்கும்
மனம் மறுத்தால்
தானே எடுத்துக்கொள்ளும்
பிடிவாதமாய் மறுத்தால்
மனதைப் பைத்தியமாக்கிவிட்டு
எடுத்துக்கொள்ளும்

உருவ உடலுக்கும் அருவ மனதுக்கும்
உயிர்தான் முடிச்செனினும்
மனமிருப்பதும் உயிரிருப்பதும்
உடலிருக்கும் வரைதானே

ஒற்றைச் சதைத் துளியாய்
கருவறை விழுந்தபோதுதான்
உயிர் வந்தது - பின்
உடல் வளர வளரத்தான்
மனம் வந்தது.

நீ என்பதும் நான் என்பதும்
உடல்தான் உடல்தான்
உயிர் என்பதும் உள்ளம் என்பதும்
உடலின் பண்புதான்

அன்புடன் புகாரி

சரணமென்றேன் (இசையில் கேட்க)

சந்தம்!

இன்றைய கவிஞர்கள் பலருக்கும் சந்தம் எழுதத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அவர்களுக்கு அது இயல்பாக வருவதில்லை. 

சீத்தலைச் சாத்தனாரைப்போல தலையில் குத்தி ரத்தம் வரவழைப்பதே அதிகம் இருக்கும், சந்தத்தின் இயல்பு நடை மிகக் குறைவாகவே இருக்கும்.

உணர்வுகளோடு பொதிந்து சிந்தனையின் ஓட்டத்தை ஆரம்பம் முதலே சந்தத்தோடு இணைத்துக்கொண்டிருந்தால், சந்தம் மிக மிக எளிமையான அதே சமயம் மிகவும் கவர்ச்சியான ஒரு நடை. 

அதற்காக சந்தத்தில் எழுதினால்தான் அது கவிதை என்று சொல்வது முட்டாள்தனம்.

கவிதையின் இலக்கணம் வாழ்க்கையின் இலக்கணத்தைப்போல மாற்றங்களால் மட்டுமே ஆனது. வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முறப்டும்போது சந்திக்கும் அனைத்து ஐயங்களையும் தடுமாற்றங்களையும் கவிதை என்றால் என்ன என்று வரையறுக்க  முற்படும்போதும் சந்திக்க நேரிடும். 

அதுதான் கவிதை.

கவிதைக்குள் கவிதை இருக்கவேண்டும் என்பதே கவிதையின் இலக்கணம் என்று பல நேரம் நான் முடித்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் தப்பிப்பதற்கான ஒரு வழி என்றும் கொள்ளலாம். 

சில கவிஞர்கள் சந்தம் என்ற சொல்லைக் கேட்டதும், எட்டுப்பத்து கிலோமீட்டர் ஓட்டம் பிடிப்பது ஏன் என்று சிந்தித்தால், அங்கே ஒரு விமரிசகனின் முகம்தான் தெரியும்.

தொண்ணூற்றி ஒன்பது விழுக்காடு எழுத்தாளர்கள் முதலில் கவிதை எழுத முயன்றவர்கள்தாம். அது கைவரப் பெறவில்லை என்றுதான் பின்னர் உரைநடை எழுதவந்தார்கள்.

சந்தம் எழுதாத சிலநூறு கவிஞர்களுக்கும் உரைநடை எழுதும் பலநூறு எழுத்தாளர்களுக்கும் சந்தக் கவிதைகளை வாசிக்கப் பிடிக்கும் என்பதே உண்மை. 

சந்தம் மனதில் தங்கும் குணம் கொண்டிருப்பதால் சில சந்தக் கவிதைகள் காலத்தால் அழியாததாய் நெஞ்சிலேயே தங்கிவிடும். இந்த நிலை எழுத்தாளர்கள் பலரையும் இன்னலுக்குள் உருவாக்கி இருக்கிறது.

ஓர் எழுத்தாளன் பெறும் அத்தனை உயரங்களையும் சில கவிதைகளே எழுதிய கவிஞன் முறியடித்துவிடுகிறானே என்ற அங்கலாய்ப்பு பல எழுத்தாளர்களுக்கு உண்டு. 

அவர்களுக்குத் தங்கள் எழுத்துக்களை உயரப் பிடித்தி நிறுத்தும் தேவை அதிகம் இருக்கிறது. அதனால் கவிதைகளை இறக்கிக் காட்டும் குணம் இயல்பாகவே மிகுத்துப் போய்விட்டது.

கவிதைகளை ஒழிக்க முடியாது என்று அறிந்த அவர்கள், கவிதைகளை அதிகம் புகழத் தொடங்கினார்கள். கவிதைகளைப் புகழ்ந்துவிட்டு, அதே சூட்டில், இன்று யாரும் கவிதை எழுதுவதே இல்லை ஒரு கவிஞனும் இன்று கிடையாது என்று ஒரு போடு போடத் தொடங்கினார்கள்.  

இதுதான் புகழ்வதுபோல் புதைப்பது என்பது.

அவன் கவிஞனே இல்லை என்று ஒரு விமரிசனத்தை வைப்பார்கள். அதற்கு ஏகமாய்ப் பல ஆராய்ச்சிகளைச் செய்து, தான் சொன்னதை நிறுவ முயற்சிப்பார்கள். ஆனால் அந்தக் கவிஞனின் கவிதைகளை உச்சிமுகர்ந்து உள்ளுக்குள் ரசிப்பார்கள்.

ஒரு பெரும் கவிஞனை சீண்டுவதற்காக விளங்காத ஒருவனின் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு ஆகா ஓகோ என்று புகழ்வார்கள். புதிதுபுதிதாக இலக்கணங்களை வகுக்கப் பார்ப்பார்கள். அதையே உண்மையென்றும் நிரூபிக்க அரும்பாடு படுவார்கள்.

ஆனால் சந்தக் கவிதைகளைக் கண்மூடிக்கொண்டு நேசிக்கக் கூடாது. இயல்பாக வரும் சந்தக் கவிதைகளை அடையாளம் காணத் தெரியவேண்டும். 
சந்தத்திற்காக வலிந்து ஏற்றும் விரையச் சொற்களால் கவிதை கழன்றுவிழுந்துவிடும் என்ற உண்மை சந்தம் எழுதுபவர்களுக்குத் தெரியவேண்டும்.

காதல் கவிதைகள் சந்தத்திற்குப் பெரிதும் ஏற்றவை. நினைத்து நினைத்துப் பாடிப்பார்க்கும் அற்புதங்களால் ஆனவை காதல் சந்தக் கவிதைகள்.


இதோ ஓர் காதல் சந்தக் கவிதை, காதலர் தினத்திற்காக இங்கே இடுகிறேன்.

தலைப்பைச் சொடுக்கினால் இசையில் கேட்கலாம்

அலையலையாய் வீசுதடி
ஞாபகங்கள் உன்
தலைமுடிக்குள் நழுவுதடி
யோசனைகள்

துளைவழியே ஊதுதடி
உயிரிதழ்கள் உன்
துணைகேட்டுப் பாடுதடி
காற்றலைகள்

பழையதயிர் மதமதப்பில்
கன்னவில்லை அதில்
போனஉயிர் போனதுதான்
மீளவில்லை

தலைகொதித்தே வெடித்தாலும்
விடுவதில்லை உன்
தீயிதழால் நீவிரிக்கும்
முத்தவலை

நிலைகுலைக்கும் நீள்விழியின்
ஒயிலாட்டம் என்
நெஞ்சடுப்பில் எனைத்தள்ளும்
புயலாட்டம்

கலைகொழிக்கும் இடைதொட்டுத்
திண்டாட்டம் என்
காலமெல்லாம் காணவேண்டும்
கொண்டாட்டம்

மழைவிழுந்த மண்வீசும்
வாசனைபோல் என்
மனமெங்கும் நீவிழுந்த
வாசமடி

குலைகுலையாய்ச் சரிந்துநிற்கும்
வாழையடி உன்
கோலங்கண்ட காய்ந்தநதி
ஊறுதடி

பள்ளங்களோ
வளர்நாளில் ஏராளம் உன்
பனிதூவும் புன்னகையால்
மேடாகும்

நில்லுங்கள் ராசாவே
என்றழைத்து இடும்
நெற்றிமுத்தம் துயர்வேரைக்
கொன்றழிக்கும்

வள்ளலுனை வாழ்வினிலே
கண்டுவிட்டேன் என்
வாய்க்காலில் கங்கைவளம்
கொண்டுவிட்டேன்

உள்ளங்கை நடுவிலுனை
உறங்கவைத்தே என்
உயிர்மூச்சுக் காற்றாலே
உனைக்காப்பேன்

மேகமொட்டு மலைமுகட்டில்
ஓய்வதுபோல் என்
மார்மீது மதுசொட்டச்
சாய்கின்றாய்

தேகமெல்லாம் எலும்பழியக்
குழையுதடி உயிர்
திரவத்தோடு திரவமென்று
வழியுதடி

நாகமணித் தேரிழுத்து
ஓடிவந்தேன் நீ
நாணமுடன் காலெடுத்து
ஏறிக்கொண்டாய்

சோகங்களைக் கொத்தாகத்
தீயிலிட்டாய் உன்
சொந்தமென்று சொல்லியெனை
உயிரிலிட்டாய்

பயிரழிந்து பட்டுப்போன
பாழ்நிலத்தில் புதுப்
பசுமையேற்றிப் பரிவோடு
ஏருழுதாய்

உயிரெடுத்து உயிருக்குள்
ஊட்டுகின்றாய் என்
உயிர்த்துடிப்பை எனக்கே நீ
காட்டுகின்றாய்

கயிறிழுக்கும் போட்டியுள்ளே
நடக்குதடி என்
கர்வமெல்லாம் பெண்மையிடம்
தோற்குதடி

சுயநினைவில் உயிலொன்று
எழுதுகின்றேன் உன்
சொர்க்கவிழிச் சிறையொன்றே
சரணமென்றேன்
நெருப்புமலர்களை ஊதி அணைத்துச் சாம்பலாக்கிவிட்டு கவிஞனை மிதித்து நிற்க விரும்பும் எழுத்தாளனின் ஆசை
ஒரு கவிஞனை quarantine ல் உட்காரவைக்கும் முயற்சியில் சற்றும் தளராத உரை
கவிஞனும் கவிதைகளும் வீழ்ச்சி பெற்றுவிட்டன என்று நிறுவுவதற்காகவே அதைத் தொடர்ந்து ஆராயும் சுயநலம்
உனக்காகக் கவிதை எழுதலாம் உண்மைக் கவிதைகள்
உலகுக்காகக் கவிதை எழுதுகிறேன் என்று எழுதலாம் மன்னிக்கப்படலாம்
இதெல்லாம் வேண்டாம் என்றுவிட்டு
ஜெயமோகனுக்காகக் கவிதை எழுதலாம்
வளர்ந்தால் பொசுங்கியது என்று விமரிசனம் பெற்று அவரடிக்கீழ் கிடந்துழல!

மத நல்லிணக்கமும் மதச் சகிப்பின்மையும்

மத நல்லிணக்கம் என்பது எது?
மதச் சகிப்பின்மை என்பது எது?
என்பதற்கு மிக அருமையான இரு சான்றுகளைக் கண்டேன்.
இருவரும் நல்ல எழுத்தாளர்கள்.
ஒருவர் எப்படி சகோதர மதத்தவரை நோக்குகிறார் இன்னொருவர் எப்படி அதை உமிழ்கிறார் என்று பாருங்கள்.
இருவரின் கட்டுரைகளும் இதோ:
சமஸ்
http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html
ஜெயமோகன்
http://www.jeyamohan.in/84362#.VroliFgrI2w

சமஸ் அவர்களின் கட்டுரை நிறைய விசயங்களில் ஒத்துப் போக வைத்த கட்டுரை என்று எழுதி இருந்தேன். என்றால் எவற்றோடு என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. அல்லது விளக்கம் தேவை என்பதை ஒவ்வொன்றாகக் காண விழைகிறேன்.
>>> உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்? <<<<
நல்ல கேள்வி. வெறி பிடித்தவர்கள் விட்டுவைக்கத்தான் மாட்டார்கள். பாபர் மசூதியை இடித்ததைப் போல, புத்தர் சிலையை உடைத்ததைப் போல.
ஆனால் அதுவல்ல இஸ்லாம். அதுவல்ல இந்துத்துவம். அதுவல்ல கிருத்தவம்.
மதச்சகிப்பைப் பலரும் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். சிவனை வணங்கும் நீயும், சுடலைமாடனை வழிபடும் அவனும் ஏசுவைத் தொழும் இவனும் என் சகோதரர்கள் என்று அன்பு பாராட்டுவதுதான் மதச் சகிப்பு.
அதுவல்லாமல், நான் எல்லோரையும் வழிபடுவேன் என்று எல்லோரும் சொல்வதுதான் மதச் சகிப்பு என்று எவரேனும் நினைத்தால் அது பெருந்தவறு.
அப்படி ஒருவன் எல்லா தெய்வங்களையும் வழிபட்டு நின்றால் அவனையும் தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை.
அவனை மதச்சகிப்பாளன் என்று சொல்வதைவிட பல மதங்களின் அல்லது பல கடவுள்களின் அல்லது பல தத்துவங்களின் நேசன் என்று சொல்லலாம்.
எவனையும் வணங்கமாட்டேன் என்று ஒரு நாத்திகன் சொல்வதைப்போல எல்லோரையும் வணங்குவேன் என்று ஒரு ஆத்திகன் சொல்கிறான்.
ஆனால் எல்லோரும் அப்படியாய் ஆகிவிடவேண்டும் என்று சமஸ் நினைத்து இதை எழுதி இருந்தால் அவர் பிழையாகவே எண்ணி எழுதி இருக்கிறார் என்பதே சரி.

>>>>இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி, மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மரபின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.<<<< சமஸ்
அன்பின் சமஸ், உங்கள் ஏக்கம் மிகவும் நியாயமானது, மத நல்லிணக்கத்திற்கு ஓர் எளிய எடுத்துக்காட்டு. உங்களைப் பாராட்டுகிறேன்.
ஆனால் எங்கோ கேட்ட வயாபிய முழக்கம் காரணமாக நீங்க எல்லாம் அழிந்தது என்று எண்ணத் தேவையில்லை.
இன்றும் இப்போதும் தமிழகமெங்கும் தமிழகத் தமிழர்கள் வாழும் உலகமெங்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சான்கள்தான்.
சென்னை வெள்ளத்தில் கோவிலைச் சுத்தம் செய்த முஸ்லிம்கள் என்று உங்கள் கட்டுரையிலேயே எழுதி இருக்கிறீர்கள் பாருங்கள்.
கனடாவில் பலகாலம் வாழ்ந்தாலும் என் கிராமத்தையும் என் தஞ்சை பெரிய கோவிலையும் அவ்வப்போது என் பக்கங்களில் நிரப்பிக்கொண்டே இருப்பேன். என்னைப் போன்றவர்களால் ஆனதுதான் பெரும்பான்மை உணர்வுகள்.
இந்த வருடப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடினோம். கொண்டாடினோம் என்றால் இந்துக் கடவுள்களைத் தொழச்சென்றோம் என்று பொருள் அல்ல, விவசாயத்துக்கு உதவும் பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொன்னோம்.
நீங்கள் இன்னும் நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும். அவை இந்து முஸ்லிம் மத நல்லிணகத்தை போற்றி வளர்ப்பதாய் இருக்க வேண்டும்.
நன்றாகவே ஆய்வு செய்து நேரடியாகவே கண்டும் கேட்டும் நடுநிலையோடு எழுதுங்கள்.
நன்றி
முக்கனிகட்குள்ளும்
முதற் கனியே


கொஞ்சு மஞ்சள்
உதட்டழகுத் தேனே

முள் முக்காட்டுக்குள்
முகம் புதைத்த மதுரமே

தமிழ் மண் வழங்கும்
தங்கச் சொத்தே

பலாவே பல நூறு நிலாவே
வா வா வா வா


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்